பதிவு செய்த நாள்
02
அக்
2021
04:10
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவில் அடைக்கப்பட்டதை அடுத்து, புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமை முன்னிட்டு, கோயிலுக்கு வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
கோவை மாவட்டத்தில், மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம், காரமடை அரங்கநாதர் கோவிலாகும். இங்கு புரட்டாசி மாதத்தில் உள்ள, 5 சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த நாட்களில், ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து, அரங்கநாத பெருமாளை வழிபட்டு செல்வது வழக்கம். அதிலும் குறிப்பாக, 1, 3, 5 ஆகிய வாரங்களில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், கோவிலுக்கு வந்து செல்வர். இன்று புரட்டாசி 3-வது சனிக்கிழமை முன்னிட்டு, அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். ஆனால் கோவில் அடைத்து இருந்ததால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், கோயிலின் நுழைவாயில் கேட் அருகே நின்று, சுவாமியை வழிபட்டனர். கோவில் முன்பு சாலையில் அமர்ந்திருந்த தாசர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகளை படையலிட்டு வழிபட்டனர். பக்தர்கள் தாசர்களிடமிருந்து, காய்கறிகளை சிறிதளவு பெற்று சென்றனர். கோவிலில் அரங்கநாதப் பெருமாளை நேரடியாக பார்த்து, வழிபட முடியாததால், பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு, மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம், காலசந்தி பூஜை ஆகிய பூஜைகள் நடந்தன. ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாளுக்கு, ஸ்தபன திருமஞ்சனம் நடந்தது. அதைத் தொடர்ந்து அரங்கநாத பெருமாள் மட்டும், கோவில் வளாகத்தின் உள்ளே வலம் வந்து, ஆஸ்தானத்தை அடைந்தார். இப்பூஜைகளில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.