பதிவு செய்த நாள்
21
அக்
2021
12:10
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட சிவன் கோயில்களில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிேஷக சிறப்பு வழிபாடு நடந்தது.
ஐப்பசி மாத பவுர்ணமியில் சந்திரனுக்கு உகந்த அரிசி சாதத்தில் சிவனை அலங்கரித்து பாராயணம் பாடினால் பஞ்சம் ஏற்படாது என்பது ஐதீகம்.இதையொட்டி நேற்று திண்டுக்கல் அபிராமியம்மன் கோயிலில் சிறப்பு ேஹாமத்துடன் சுவாமி, அம்பாளுக்கு அன்னாபிேஷகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. கோட்டை மாரியம்மன், வெள்ளை விநாயகர், ரயிலடி சித்தி விநாயகர், ரவுண்ட் ரோடு கற்பக கணபதி உட்பட பல்வேறு கோயில்களில் சிறப்பு அபிேஷகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.பழநி கலையம் புத்தூர் கைலாச நாத சுவாமி கோயில், சிவகிரிபட்டி இடும்பன் கோயில், மதனபுரம் அண்ணாமலையார் உண்ணாமலை நாயகி அம்மன் கோவில், பாறைப்பட்டி விக்கிர சோழிஸ்வரர் உள்ளிட்ட கோயில்களில் அன்னாபிஷேகம் நடந்தது.
மதனபுரம் கோயிலில் சங்காபிஷேகம் நடந்தது.வத்தலக்குண்டு குரு காசிவிசுவநாதர் கோயிலில் சிவலிங்கத்திற்கு அரிசி சாதம், காய்கறிகளால் அலங்காரம், தீபாராதனை நடந்தது. பாராயணம் பாடி வழிபட்டு, அன்னதானம் வழங்கினர்.நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் மூலவர் கைலாசநாதர் சமேத செண்பகவல்லி அம்மனுக்கு விசேஷ பூஜைகள் நடந்தது. ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேக அபிஷேகம் நடந்தது.
கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயிலில், ஓம்கார விநாயகர், மூலவர், நந்திக்கு வேதி தீர்த்த அபிேஷகம் நடந்தது. மூலவருக்கு அன்னாபிேஷகத்துடன், காய்கனிகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மெய்கண்ட சித்தர் குகையில், அன்னபூரணிக்கு அன்னக்காப்பு சாற்றுதலுடன், மகா தீபாராதனை நடந்தது. அன்னதானம், ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி, காரமடை ராமலிங்கசுவாமி, குட்டத்துப்பட்டி ஆதிதிருமூலநாதர், பித்தளைப்பட்டி அண்ணாமலையார் கோயில்களிலும் சிறப்பு ஆராதனைகள் நடந்தது.