துாத்துக்குடி: துாத்துக்குடி சிவன் கோயிலில் சிவபெருமானுக்கு ஐப்பசி அன்னாபிஷேகவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. நேற்று காலை விநாயகர் பூஜை, ஸ்ரீ ருத்ர பாராயணத்துடன் கலச பூஜை, யாகம் நடந்தது. காலை 11மணிக்கு அன்னாபிஷேகம் செய்யும் சாதங்களுக்கு பஞ்சபிரம்ம மந்திரங்களால் பூஜை செய்யப்பட்டு அன்னாபிஷேக பாத்திரம் ஆலயம் வலம் வந்தது. மதியம் 12 மணிக்கு அன்னாபிஷேக அலங்காரம் துவங்கியது. தலைமைஅர்ச்சகர் செல்வம் பட்டர் அலங்காரங்களை செய்தார்.
பின்னர் அன்னாபிஷேக அலங்காரத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மாலையில் அலங்கார தீபாராதனை சாய் ரட்சனையுடன் நடந்தது. ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி கிருஷ்ணமூர்த்தி, தலைமைஅர்ச்சகர் செல்வம் பட்டர், பௌர்ணமி பூஜை கமிட்டி வைரவநாதன், ராதா, நெல்லையப்பன், மாரியப்பன் குமார் மற்றும் பலர் செய்திருந்தனர். மளவராயநத்தம், தென்னகர் சிவன் கோயிலில் இந்தாண்டிற்கான அன்னாபிஷேக விழா நேற்று நடந்தது. விழாவினை முன்னிட்டு சிவபெருமானுக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக வழிபாடுகளும், அதனைத்தொடர்ந்து சிவபெருமான் அன்ன அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மாரமங்கலத்தில் சந்திரசேகரி அம்பிகை சமேத சந்திரசேகரசுவாமி சிவன் கோயிலில் அன்னாபிஷேக விழா நடந்தது. விழாவில், சிவனடியார் மந்திரமூர்த்தி, மூக்கன் சித்தர், சிர்கோனியம் மேலாளர் பலவேசம், உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விழாக்கமிட்டி முத்துக்குமார் தலைமையில் நிர்வாகத்தினர், செய்திருந்தனர்.