பதிவு செய்த நாள்
06
நவ
2021
01:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சுவாமி தரிசனத்திற்கு, 13 ஆயிரம் பக்தர்களாக உயர்த்தி கலெக்டர் முருகேஷ் அறிவித்துள்ளார்.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் வரும், 10ல், கொடியேற்றத்துடன் தீப திருவிழா தொடங்கி, 19ல், 2,668 அடி உயர மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதை முன்னிட்டு, விழா சிறப்பாக நடக்க வேண்டியும், எவ்வித அசம்பாவிதம் ஏற்படாமலும், பக்தர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படக்கூடாது என வேண்டி, நாளை, (7ல்,) நகர காவல் தெய்வமான துர்க்கையம்மனுக்கு சிறப்பு பூஜை, அபி ேஷகம் நடத்தப்பட்டு வழிபாடு நடக்க உள்ளது. இந்நிலையில் ஏற்கனவே, 10 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், உள்ளூர் பக்தர்கள், 3,000 பேர், வெளியூர் பக்தர்கள், 10 ஆயிரம் பேர் என, மொத்தம், 13 ஆயிரம் பேராக உயர்த்தி வரும், 7, முதல், 17ம் தேதி வரையும், 21, முதல் 23ம் தேதி வரை சுவாமி தரிசனம் செய்ய அனுமதித்து கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார். இதில், 17 மதியம், 1:00 மணி முதல், 20ம் தேதி வரை சுவாமி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள், இன்று முதல், www.arunachaleswarartemple.tnhrec.in என்ற இணையதளம் மூலம் கட்டணமில்லாமல் முன்பதிவு செய்து கொள்ளலாம். உள்ளூர் பக்தர்களுக்கு, வரும், 7 மற்றும், 8ல், கலெக்டர் அலுவலகம், ஆர்.டி.ஓ., அலுவலகம், நகராட்சி அலுவலகம், காந்தி நகர் அறநிலையத்துறை அலுவலகம் ஆகிய நான்கு இடங்களில் அனுமதி பாஸ் வழங்கப்படும். அடையாள அட்டை பெற ஆதார் அட்டை, கொண்டு வர வேண்டும்.