திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று கந்த சஷ்டி சூரசம்ஹார லீலை நடந்தது. இன்று (நவ.,10) தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை காலை கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றம் நடக்கிறது. கோயிலில் நவ.,4 முதல் நடந்த யாகசாலை பூஜைகள் நேற்று காலை பூர்த்தி செய்யப்பட்டு, தங்கம் மற்றும் வெள்ளி குடங்களில் இருந்த புனித நீரால் சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.மாலையில் உற்ஸவர் சுப்பிரமணிய சுவாமி சிம்மாசனத்திலும் வீரபாகு தேவர் படிச்சட்டத்திலும் கோயில் திருவாட்சி மண்டபத்தில் எழுந்தருளினர்.
சூரசம்ஹாரம்: சூரபத்மன் முன்செல்ல, வீரபாகு தேவர் விரட்டி செல்ல, தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமியின் பிரதிநிதியான சிவாச்சாரியார் வாள் கொண்டு செல்ல, அவர்களை தொடர்ந்து சுவாமி வேலுடன் சூரனை எட்டு திக்குகளிலும் விரட்டிச் சென்று சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. பின்பு சூரசம்ஹார புராண கதையை, பக்தர்களுக்கு சிவாச்சாரியார் கூறினார்.