சபரிமலையில் தொடங்கியது மண்டலகாலம்: 41 நாட்கள் தொடர்ந்து பூஜைகள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17நவ 2021 10:11
சபரிமலை:சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மண்டல காலம்தொடங்கியது. கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் 41 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் பூஜைகள் ஒரு மண்டல காலம் ஆகும். தமிழகத்தில் இன்று தான் கார்த்திகை ஒன்று. ஆனால் கேரளாவில் நேற்று கார்த்திகை முதல் தேதி என்பதால் அதிகாலை 4:00 மணிக்கு மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்து விளக்கேற்றினார். பக்தர்கள் சரணகோஷமிட்டனர். தொடர்ந்து தந்திரி கண்டரரு மோகனரரு ஐயப்பனுக்கு அபிஷேகங்கள் நடத்தி நெய் அபிஷேகத்தை தொடங்கி வைத்தார்.தொடர்ந்து கணபதி ஹோமமும் வழக்கமான உஷபூஜை, உச்சபூஜை, தீபாராதனை, அத்தாழபூஜை, இரவு 7:00 மணிக்கு படிபூஜை ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து 40 நாட்கள் தினமும் அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கும். இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். எல்லா நாட்களிலும் இரவு 7:00 படிபூஜை உண்டு. டிச., 26 -ம் தேதி மண்டலபூஜை நடைபெறுகிறது.
ஆன்லைனில் முன்பதிவுசெய்த பக்தர்களிடம் இரண்டு தடுப்பூசி சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். சான்றிதழை சரிபார்த்த பின்னர் தரிசனத்துக்கு அனுமதிக்கின்றனர். நிலக்கல்லில் ஸ்பாட் புக்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.