பதிவு செய்த நாள்
03
ஜூலை
2012
10:07
சேலம்: சேலம், குள்ளம்பட்டி கிராமத்தில் உள்ள தர்மராஜா, திரவுபதி அம்மன் கோவிலில் நடந்த குண்டம் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சேலம் அடுத்த குள்ளம்பட்டி கிராமத்தில், பிரசித்தி பெற்ற தர்மராஜா, திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. கோவில் குண்டம் திரு விழா ஏப்ரல் 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 25ம் தேதி திரவுபதி அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள், 27ம் தேதி திரவுபதி அம்மன்- அர்ச்சுணனனுக்கு திருக்கல்யாணம் விமர்சையாக நடந்தது. 30ம் தேதி தர்மராஜா ஸ்வாமி அலங்காரத்தில், தர்மம் வழங்குதல் உற்சவமும், நேற்று முன்தினம் கங்கணம் கட்டுதல், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று, குண்டம் இறங்கும் தீ மிதி விழா நடந்தது. முன்னதாக, காலை 6.30 மணிக்கு அக்னி கரகம் ஊர்வலமாக எடுத்து வந்து குண்டத்தில் தீ வளர்க்கப்ட்டது. தொடர்ந்து, அர்ச்சுணன் தபசு, வன்னி மரத்தில் இருந்து ஆயுதம் எடுத்து வருதல், அரவான் கடபலி, சக்ராபுரம் கோட்டை இடித்தல், துச்சாதனன் வதம் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது. பகல் ஒரு மணிக்கு, பாலக்கம்பம் நடுதல், மாலை 4 மணிக்கு அம்மன் ஆற்றுக்கு சென்று வீரகந்தம் பூசுதல் உற்சவம், அக்னி பிரவேசம் செய்யும் உற்சவமும் நடந்தது. மூலவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மாலை 6 மணிக்கு, அம்மன் சபதம் முடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஸ்வாமி தரிசனம் செய்தனர். இன்று மாலை 4 மணிக்கு போர் மன்னன் காவு பூஜை, 5ம் தேதி மஞ்சள் நீராட்டு உற்சவம், 6ம் தேதி தர்மராஜா பட்டாபிஷேகம் நடக்கிறது.