பதிவு செய்த நாள்
29
நவ
2021
06:11
ஆலாந்துறை: நல்லூர் வயலில், மாட்டு கொட்டகையின் அருகே ஆஞ்சநேயர் சிலை கண்டெடுக்கப்பட்டது.
நல்லூர் வயல், சப்பானி மடை ரோடு பகுதியில், ரங்கசாமி, 48 என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இத்தோட்டத்தில், மாட்டு கொட்டகை உள்ளது. இந்த மாட்டு கொட்டகை அருகே, மாடுகளின் தீவனத்திற்காக, புற்செடிகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வழக்கம்போல, ரங்கசாமி மாட்டு கொட்டகைக்கு சென்றபோது, புற்கள் வளர்க்கப்பட்டு வந்த இடத்தில், ஒரு அடி உயரமுள்ள, ஆஞ்சநேயர் சிலை கிடந்துள்ளது. இதுகுறித்து வருவாய்த்துறையினருக்கு, ரங்கசாமி தகவல் தெரிவித்தார். உடனடியாக, சம்பவ இடத்திற்கு ஆலாந்துறை வருவாய் ஆய்வாளர் முத்துகிருஷ்ணன், வி.ஏ.ஓ., சந்திரசேகர் வந்து சிலையை கைப்பற்றி விசாரணை செய்தனர். முதற்கட்ட விசாரணையில், வீட்டில் அலங்காரத்திற்காக செய்யப்படும், காஸ்டிங் டை மெட்டீரியல், மண் கலந்து செய்யப்பட்ட முலாம் பூசப்பட்ட சிலை என்பது தெரியவந்தது. வீட்டில் வைத்திருக்க வேண்டாம் என யாரேனும், இங்கு சிலையை வீசிவிட்டு சென்றிருக்கலாம் என, வருவாய்த்துறையினர் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து, கைப்பற்றப்பட்ட ஆஞ்சநேயர் சிலை, பேரூர் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, தாசில்தார் ரமேஷிடம் ஒப்படைக்கப்பட்டது.