பதிவு செய்த நாள்
02
டிச
2021
03:12
சென்னை :ஹிந்து சமய அறநிலைய துறை சார்பில், மூன்று கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளை, முதல்வர் ஸ்டாலின் நேற்று வீடியோ கான்பரன்ஸ் வழியே துவக்கி வைத்தார்.
ஹிந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை சார்பில், நடப்பாண்டில் 10 கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் துவக்கப்படும் என, அரசு அறிவித்தது. இதன்படி, சென்னை - கொளத்துார்; நாமக்கல் - திருச்செங்கோடு; திண்டுக்கல் - ஒட்டன்சத்திரம்; துாத்துக்குடி - விளாத்திகுளம் ஆகிய நான்கு இடங்களில் கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் துவக்க, உயர்கல்வித் துறைக்கு அரசு அனுமதி அளித்தது.கல்லுாரியில் பி.காம்., - பி.பி.ஏ., - பி.சி.ஏ., - பி.எஸ்.சி., கணினி அறிவியல் ஆகிய பாடப் பிரிவுகள் துவக்கவும் அரசாணை வெளியிடப்பட்டது.
முதல் கட்டமாக, சென்னை கொளத்துாரில் கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியை, நவம்பர் 2ல் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
வீடியோ கான்பரன்ஸ்: தொடர்ச்சியாக, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் பழனியாண்டவர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி; துாத்துக்குடி, விளாத்திகுளத்தில் சுப்பிரமணிய சுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லுாரி.நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு புதுப்புளியம்பட்டி கிராமத்தில் அர்த்தநாரீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி என, மூன்று புதிய கல்லுாரிகளை நேற்று தலைமை செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்ஸ் வழியே துவக்கி வைத்தார். இக்கல்லுாரிகள், சமய வகுப்புகளுடன் துவங்கப்பட்டுள்ளன. சுப்பிரமணிய சுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான கட்டடத்தில் துவங்கப்பட்டுள்ளது. மற்ற கல்லுாரிகள், தற்காலிக கட்டடத்தில் துவங்கப்பட்டுள்ளன.இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பெரியசாமி, பொன்முடி, கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், சக்கரபாணி, சேகர்பாபு, மதிவேந்தன், தலைமை செயலர் இறையன்பு மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஐ.டி.ஐ., கட்டடம்: இதேபோல, அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில், 21.63 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை, முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்ஸ் வழியே திறந்து வைத்தார்.மேலும், அமைப்பு சாரா தொழிலாளர்கள் 50 ஆயிரத்து 721 பேருக்கு, 12.35 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கு அடையாளமாக, ஏழு பேருக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார்.