பதிவு செய்த நாள்
02
டிச
2021
03:12
ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் வரும் கோவில்களின் நிதி விவகாரங்களை தணிக்கை செய்யும் தணிக்கை பிரிவை, தமிழக அரசின் நிதித் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக வெளியான அரசாணை, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து தமிழக ஆலய பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் டி.ஆர்.ரமேஷ் கூறியதாவது: தமிழக கோவில்களின் வருமானத்தை தணிக்கை செய்யும் பணியை, அறநிலையத் துறைக்குஉள்ளேயே இருக்கும் தணிக்கை பிரிவு கவனித்து வந்தது. இதற்காக, தமிழகம் முழுதும் பல தணிக்கை அலுவலகங்கள் செயல்பட்டன. அவற்றில் ஏராளமான ஊழியர்கள் பணியாற்றினர். தணிக்கை பணி செய்வதற்காக, ஒவ்வொரு கோவிலில் இருந்தும், அதன் ஆண்டு வருமானத்தில், 4 சதவீத தொகையை, ஹிந்து சமய அறநிலையத் துறை தனியாக வசூலித்து வந்தது. இந்த தணிக்கை பிரிவு, பணியை சரிவர செய்யவில்லை; தணிக்கை தொடர்பான ஏராளமான ஆட்சேபனைகளும் நிலுவையில் இருந்தன. மேலும், இந்த தணிக்கை பிரிவே, ஹிந்து சமய அறநிலைய சட்டம் - 1959க்கு எதிரானது என்று குற்றச்சாட்டுகள் எழும்பின.
இந்நிலையை மாற்றி, வெளி தணிக்கை செய்ய உத்தரவிடக்கோரி, கடந்த டிசம்பரில், சென்னை உயர் நீதிமன்றத்தில், பொதுநல வழக்கு தொடர்ந்தேன்.
சில நாட்களுக்கு முன், விசாரணையை விரைவுபடுத்த வேண்டும் என, நீதிமன்றத்தில் முறையிட்டேன். தமிழக அரசு, கோர்ட் நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, அவசரமாக தணிக்கை பிரிவை, நிதித் துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. இப்படி செய்திருப்பது கூட தவறு தான்.
* ஹிந்து சமய அறநிலையத் துறை சட்டப்பிரிவு 87 - 4ன் படி, - ஆண்டு வருமானம் 1,000 ரூபாய்க்கு கீழ் உள்ள கோவில்களுக்கு மட்டுமே, ஹிந்து சமய அறநிலையத் துறை உள் தணிக்கை செய்ய முடியும்.
பிற கோவில்களுக்கு வெளி தணிக்கை தான் செய்ய வேண்டும். ஆனால், 1976 முதல் வெளி தணிக்கை செய்யவில்லை
* தமிழக கோவில்களில், ஹிந்து சமய அறநிலையத் துறை ஆணையர் கீழ் இயங்கும் தணிக்கை பிரிவு, உள் தணிக்கை செய்யும் என, 1976ல் இயற்றப்பட்ட சட்ட விதிக்கு, தமிழக சட்டசபையின் ஒப்புதல் பெறவில்லை.
ஒப்புதல் பெறாத விதிகள் சட்டப்படி செல்லாது. எனவே, ஹிந்து சமய அறநிலையத் துறை செய்து வந்த உள் தணிக்கை சட்டவிரோதமானது
* ஆண்டு வருமானம் 5 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ள கோவில்களில், உடனுக்குடன் தணிக்கை நடக்க வேண்டும். இதுவும் 50 ஆண்டுகளாக நடக்கவில்லை.
அதிக வருமானம் இருக்கும் பல கோவில்களில் கூட, ஆண்டு தணிக்கை நடத்தப்படவில்லை
* ஆண்டு வருமானம், 2 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ள கோவில்களில், பட்டய கணக்காளர் மட்டுமே தணிக்கை மேற்கொள்ள வேண்டும் என, வருமான வரி சட்டம் கூறுகிறது.
அப்படி இருக்கும்போது, அன்னதான கணக்குகளை மட்டும் வருமான வரி விலக்கு பெறுவதற்காக, பட்டய கணக்காளரை வைத்து, தணிக்கை செய்து வருமான வரி துறைக்கு கணக்கு காண்பிக்கின்றனர்
* பிற கோடிக்கணக்கான வரவு - செலவுகளை, வெளி தணிக்கைக்கு உட்படுத்துவதில்லை. மேலும், உள் தணிக்கை அறிக்கைகளையும், அறநிலையத் துறை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்வதில்லை; இவை சட்ட மீறல்கள்
* நான் வழக்கு தொடுத்து நெருக்கடி கொடுத்த பின், தற்போது தமிழக அரசு, திடீரென ஒரு அரசாணையை வெளியிட்டு, ஹிந்து சமய அறநிலையத் துறை ஆணையர் கீழ் இயங்கி வந்த தணிக்கை பிரிவை, நிதித் துறையில் சேர்த்துள்ளது. இந்த அரசாணையில் கூறப்பட்டுள்ள சில தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன
* அறநிலையத் துறை உள் தணிக்கையில் கூறப்பட்ட, 15 லட்சம் தணிக்கை ஆட்சேபனைகள் தீர்க்கப்படாமல் உள்ளன. இதன் மதிப்பு 1,300 கோடி ரூபாயை தாண்டும். நிலுவையில் இருக்கும் தொகைக்கு வட்டி போட்டால் அது, 10 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டும். இந்த இழப்புக்கு யார் பொறுப்பு?
* இவற்றை சரிசெய்யாமல், பல ஆண்டுகளாக நிலுவையில் வைத்திருந்தது, ஹிந்து சமய அறநிலையத் துறையின் முழு சீர்கேட்டையும் அப்பட்டமாக உணர்த்து கிறது
* தமிழக அரசின் நிதித் துறை வாயிலாக, கோவில் கணக்குகளை தணிக்கை செய்வது, வெளி தணிக்கை ஆகாது. 2 லட்சம் ரூபாய்க்கு மேல் ஆண்டு வருமானம் உள்ள கோவில்களை, நிதித் துறையினர் தணிக்கை செய்ய முடியாது. பட்டய கணக்காளர்கள் மட்டுமே தணிக்கை செய்ய வேண்டும். இந்த விதிமீறல் குறித்தும் வழக்கு தொடுக்க இருக்கிறேன்
* புதிய தணிக்கை நடை முறையால், 40 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் ஆட்சேபனைகளை எப்படி விரைந்து தீர்க்க முடியும். கோவில்கள் அடைந்த நஷ்டத்தை எப்படி ஈடு செய்ய முடியும்; இது குறித்து புதிய அரசாணையில் எதுவும் கூறப்படவில்லை.இவ்வாறு ரமேஷ் கூறினார்.
- நமது நிருபர்