பூலோக சொர்க்கம் என்ற பக்தர்களால் அழைக்கப்படும், திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா , திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது. இன்று முதல் பகல் பத்து விழா தொடங்கி, 13ம் தேதி வரை, 10 நாட்கள் நடக்கிறது.
பகல் பத்து உற்சவத்தின் முதல் நாளான இன்று, நம்பெருமாள் சௌரிக் கொண்டை, ரத்தினகிளி, ரத்தின அபயஹஸ்தம், நெல்லிக்காய் மாலை, அடுக்கு திருவாபரணங்கள் தரித்து மூலஸ்தானத்திலிருந்து எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். ராப்பத்து விழா துவங்கும், 14ம் தேதி, அதிகாலை, 4:45 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்படும் நம்பெருமாள், சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசலை திறந்து கடந்து செல்வார். ராப்பத்தின், 7ம் நாளான, 20ம் தேதி திருக்கத்தல சேவை நடக்கிறது. 8ம் நாள், திருமங்கை மன்னன் வேடுபறி நடக்கும். பின், 23ம் தீர்த்தவாரியும், 24ம் தேதி நம்மாழ்வார் மோட்சமும் நடைபெறுகிறது. வைகுண்ட ஏகாதசி விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.