ஒதுங்கி நிற்கக்கூட இடமில்லை: குமுளி பஸ் ஸ்டாண்டில் ஐயப்ப பக்தர்கள் அவதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07டிச 2021 12:12
கூடலூர்: குமுளி பஸ் ஸ்டாண்டில் இரவு நேரத்தில் வரும் ஐயப்ப பக்தர்கள் ஒதுங்கி நிற்கக்கூட இடமில்லாமல் மழையில் நனைந்து அவதிப்பட்டு வருகின்றனர். தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது குமுளி. இங்குள்ள தமிழகப் பகுதியில் பஸ் ஸ்டாண்ட் வசதியின்றி ரோட்டிலேயே பஸ்கள் நிறுத்தப்படுகிறது. பயணிகள் நிழற்குடை, குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி இல்லாமல் பயணிகள் தொடர்ந்து சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். புது பஸ் ஸ்டாண்ட் கட்டுவதற்கு ஏற்பட்டுள்ள இழுபறி காரணமாக தற்போது சபரிமலை சீசனில் ஐயப்ப பக்தர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தரிசனம் முடித்து திரும்பும் பக்தர்கள் இரவு நேரங்களில் எல்லைப்பகுதியில் வரும்போது பஸ் வசதியின்றி காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. சில நாட்களாக தொடர்ந்து இரவு நேரங்களில் மழை பெய்து வந்த நிலையில் பஸ்சுக்காக காத்திருக்கும் ஐயப்ப பக்தர்கள் ஒதுங்கி நிற்க கூட இடமின்றி சிரமத்துக்கு உள்ளாகின்றனர். சபரிமலை சீசன் முடியும் வரை குமுளியில் ஐயப்ப பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக நிழற்குடை அமைக்க கூடலூர் நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும். மேலும் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதியை அதிகப்படுத்த வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.