பதிவு செய்த நாள்
10
டிச
2021
04:12
அன்னூர்: பிரசித்தி பெற்ற, மன்னீஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கோவை மாவட்டம், அன்னூரில் பிரசித்தி பெற்ற மன்னீஸ்வரர் கோவில் உள்ளது. மேற்றலை தஞ்சாவூர் என்று அழைக்கப்படும், இக்கோவில், ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. ஞானிகளால் வழிபாடும், மன்னர்களால் திருப்பணியும் செய்யப்பட்ட பெருமை உடையது.
இக்கோவிலில், கடந்த இரண்டு ஆண்டுகளாக, தேரோட்டம் நடைபெறவில்லை. இந்த ஆண்டு தேர்த் திருவிழா இன்று துவங்கியது. காலை 8:30 மணிக்கு, கணபதி வேள்வி நடந்தது. இதையடுத்து விநாயகர், மன்னீஸ்வரர், நடராஜப் பெருமான், அருந்தவச் செல்வி அம்மன், முருகப்பெருமான் சன்னதிகளில் சிறப்பு வழிபாடு நடந்தது. காலை 9:45 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. இதையடுத்து, அருந்தவச் செல்வி உடனமர் மன்னீஸ்வரர், சிறப்பு அலங்காரத்தில், கோவில் உட்பிரகாரத்தில், உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் அன்னூர் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். வருகிற 15-ஆம் தேதி வரை தினமும் மாலை 6:00 மணிக்கு சூரிய, சந்திர, பூத, புஷ்ப வாகனங்களில் மன்னீஸ்வரர் உலா நடக்கிறது. 16ம் தேதி காலை 10:30 மணிக்கு, திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெற உள்ளது. இதில், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள், சிரவை ஆதீனம் குமரகுருபர சாமிகள் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.