பதிவு செய்த நாள்
05
ஜூலை
2012
11:07
கன்னியாகுமரி: சுவாமி விவேகானந்தரின் 110வது நினைவுநாளை முன்னிட்டு கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் நேற்று அன்னபூஜை நடந்தது.வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் 1902ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி காலமானார். பாரதத்தின் பெருமையையும் இந்து தர்மத்தின் பெருமையையும் நாடு முழுவதும் பறைசாற்றிய சுவாமி விவேகானந்தரின் நினைவுதினம் ஆண்டுதோறும் நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அவரின் 110வது நினைவு நாளான நேற்று (4ம் தேதி) கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர கிராம முன்னேற்ற திட்டத்தின் சார்பில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பிடிஅரிசி மூலம் சேகரிக்கப்பட்ட அரிசியைக் கொண்டு கேந்திர அவைக் கூடத்தில் மலை போல் குவித்து வைத்து அரிசியில் மாவிளக்கு, மலர்கள் போன்றவற்றால் அலங்கரிக்கப்பட்டு அரிசியின் மேற்பகுதியில் அன்னபூரணி விக்ரகம் வைக்கப்பட்டு பூஜை செய்து வழிபட்டனர்.நேற்று காலை 10 மணிக்கு கேந்திர மூத்த ஊழியர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். கேந்திர துணைத்தலைவர் பாலகிருஷ்ணன், பொது செயலாளர் பானுதாஸ், செயலாளர்(நிர்வாகம்) அனுமந்த்ராவ், கேந்திர நிற்வாக அதிகாரி கிருஷ்ணசுவாமி, கேந்திர மாணவ, மாணவியர் ஆசிரியர்கள், கிராம முன்னேற்ற திட்ட தொண்டர்கள் உட்பட திரளானோர் கலந்துகொண்டனர்.அன்னபூஜையில் சேகரிக்கப்பட்ட அரிசி விவேகானந்தா கேந்திரா நிர்வாகத்தின் கீழ் இயக்கும் பால்வாடி மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு வழங்கப்படுகிறது.