மானாமதுரை: மானாமதுரை அப்பன் பெருமாள் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்குட்பட்ட மானாமதுரை மேல்கரை பகுதியில் வைகை ஆற்றங் கரையை ஒட்டியுள்ள அப்பன் பெருமாள் கோயிலில் கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் நடைபெற்று வந்து முடிவடைந்ததை தொடர்ந்து கும்பாபிஷேக விழாவிற்காக 2 நாட்களுக்கு முன்பாக யாகசாலை பூஜைகள் துவங்கி நடைபெற்று வந்தது. இன்று காலை கும்பாபிஷேக விழாவிற்காக அர்ச்சகர்கள் யாகசாலையில் இருந்து புனிதநீர் அடங்கிய கலசங்களை ஊர்வலமாக கோவிலை சுற்றி வலம் வந்த பின்னர் காலை 9:40 மணிக்கு அப்பன் பெருமாள், தாயார் கோபுர விமானக் கலசத்திற்கு புனித நீர் ஊற்றிய பின்னர் மற்ற தெய்வங்களான ஆஞ்சநேயர், ஹயக்கிரீவர், கருடாழ்வார் சந்நிதி விமான கலசங்களுக்கும் புனிதநீரை ஊற்றினர். இதனை தொடர்ந்து அப்பன் பெருமாள் சுவாமிக்கும் மற்ற சுவாமிகளுக்கும் அபிஷேக,ஆராதனைகள் நடைபெற்றது. கோயில் முன்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை மானாமதுரை அப்பன் பெருமாள் கைங்கர்ய குழுவினர் செய்திருந்தனர்.