பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தமிழ் மொழியை கட்டாயம் கற்றுத்தர வேண்டும்: மதுரை ஆதீனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13டிச 2021 06:12
திருப்பரங்குன்றம்: பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு தமிழ் மொழி கட்டாயம் கற்றுத்தர வேண்டும் என மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பேசினார். நக்கீரர் தமிழ் சங்கம் சார்பில் திருப்பரங்குன்றத்தில் மாநாடு நடந்தது. தலைவர் முத்து தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் ஓம்உலகநாதன், யார் கண்ணன் முன்னிலை வகித்தனர். நிறுவனர் பாஸ்கரன் வரவேற்றார். அகில இந்திய தமிழ்ச்சங்கப் பேரவை பொதுச் செயலாளர் முகுந்தன், மத்திய அதிவிரைவு படை கமாண்டன்ட் எரிக் கில்பர்ட் ஜோஸ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சங்கரன்கோவில் சக்திபீடம் சந்திரா சுவாமிகள், ஆன்மீகச் செம்மல் சண்முகசுந்தரம் உள்பட 20 பேர்களுக்கு விருது வழங்கி மதுரை ஆதீனம் பேசியதாவது: சங்கம் என்ற அடைமொழி பிற மொழிகளுக்கு கிடையாது. தெய்வத்தோடு தொடர்புடையது தமிழ் மொழி. அனைத்து மொழிகளையும் ஆண்டவன் படைத்தான். ஆனால் தமிழ் மொழிக்கு மட்டும்தான் சங்கம் அமைத்தான். பாலி உள்பட பல மொழிகள் நிலைகுலைந்து மறைந்தன. அங்ஙனம் மறையாது என்றும் ஒரு தன்மையாக இனிது விளங்குகிறது நமது தமிழ் மொழியாகும். உலகை உய்விக்கும் ஆற்றல் மட்டுமின்றி கடவுளை உய்விக்கும் ஆற்றலும் தமிழ் மொழிக்கு உண்டு. இறைவன் தனது திருக்கரத்தால் எழுதிய பெருமை திருவாசகத்திற்கு உண்டு. கத்தியின் கூர்மையான பகுதி உயர்வு பெறுவது போல் இந்தியாவின் நில அழைப்பில் தென்னாடு கூர்மையாக அமைந்திருப்பது காணலாம். கூர்மையான தென்னாடு நிறைந்த மெய்ஞானம் கொண்டது.
தமிழர்கள் ஒவ்வொருவரும் நமது தாய்மொழி மீது மிகுந்த பற்றுக் கொண்டவர்களாக இருக்க வேண்டும். நக்கீரர் நமக்கு சொன்னவை அனைத்தும் தமிழ் முத்துக்கள். அவை தமிழர்களுக்கு கிடைத்த சொத்து. அந்த சொத்தை நாம் பயன்படுத்தினால் நல்ல வித்தாக மாறலாம். தமிழகத்தில் எங்கு நோக்கினும் ஆங்கிலக்கல்வி தான் உள்ளது. குழந்தைகள் பெற்றோரை மம்மி, டாடி என்கின்றனர். வெளிநாடுகளில் மம்மி என்றால் இறந்த இடத்திற்குதான் அப்பெயர். ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு விரட்டப்பட்டனர். ஆனால் அவரது மொழி, சம்பிரதாயங்கள் போகவில்லை. எந்த ஊரில் மறந்தாலும் மதுரையை மறக்க கூடாது. தமிழர்களுக்கு தமிழர்கள் முடிந்தளவு உதவி செய்யுங்கள். எங்கும் நிம்மதி இல்லாத நிலைமை உள்ளது. தமிழ் தமிழன் இன்று ஆங்கிலத்துக்கு அடிமையாகி விட்டான் என்பது வருத்தமான நிலை. இந்நிலை மாற வேண்டும் தமிழ்மொழி செழித்தோங்க வேண்டும். இதற்கு இளைஞர்கள் முன்வரவேண்டும். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு தமிழ் மொழியை கட்டாயம் கற்றுத் தர வேண்டும். என்றார்.