பதிவு செய்த நாள்
14
டிச
2021
06:12
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தா நிதிக்கு ஆரத்தி எடுத்தபோது, மழை துாரியதால், நமசிவாய கோஷமிட்டு பக்தர்கள் பரவசமடைந்தனர். ‘காசியை விட வீசம் பெருசு, விருத்தகாசி’ என்ற ஆன்மிக வரலாறு உள்ளது.
கங்கையில் நீராடி, காசி விஸ்வநாதரை வழிபடுவதுபோல, மணிமுக்தாற்றில் நீராடி, விருத்தகிரீஸ்வரரை வழிபட்டால் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால், மணிமுக்தாற்றில் நீராடி, முன்னோர்களுக்கு திதி கொடுக்க பல மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வந்து செல்கின்றனர். கார்த்திகை மாத சோமவாரத்தையொட்டி, விருத்தாசலம் மணிமுக்தா நதிக்கு நேற்று மாலை சிறப்பு ஆராதனை நடந்தது. மாலை 5:45 மணிக்கு மேல், ஆற்றங்கரை சித்தி விநாயகர் படித்துரையில், புனிதநீர் கலசங்கள் வைத்து, 11 வகையான பொருட்களால் நதிக்கு சிறப்பு அபிேஷகம், மலர்கள் மற்றும் வஸ்திரங்கள் சமர்ப்பணம் செய்யப்பட்டன. தொடர்ந்து, கயிலை வாத்தியங்கள் முழங்க, மணிமுக்தா நதிக்கு சிவாச்சாரியார்கள் ஆரத்தி எடுத்தனர். அப்போது, பூஜையை ஏற்று, ஆசி வழங்கியதுபோல மழை துாரியதால், பக்தர்கள் நமசிவாய கோஷமிட்டு, பரவசம் அடைந்தனர். முன்னதாக, படிக்கட்டுகளில் கோலமிட்டு, விளக்கேற்றி சுமங்கலி பெண்கள் வழிபட்டனர்.