பதிவு செய்த நாள்
14
டிச
2021
10:12
மேல்மருவத்துார் : மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், சக்திமாலை இருமுடி விழா நேற்று துவங்கியது; ஜனவரி 17 வரை நடக்கிறது.
மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி விழாவை ஒட்டி, பக்தர்கள் சக்திமாலை அணிவது வழக்கம். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் விரதம் இருந்து, குடும்பத்தோடு இருமுடி செலுத்தி, சுயம்பு அன்னைக்கு அபிஷேகம் செய்வர்.இந்த ஆண்டு, தைப்பூச ஜோதி விழா மற்றும் சக்திமாலை இருமுடி விழா நேற்று துவங்கியது. ஆதிபராசக்தி அம்மனுக்கு அதிகாலை 3:00 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், இயற்கை வழிபாடும் நடந்தன.
தொடர்ந்து, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், சுயம்பு அன்னைக்கு இருமுடி அபிஷேகத்தை துவக்கி வைத்தார். அன்னைக்கு, ஒன்பது சிறுமியர், ஒன்பது தம்பதியர் அபிஷேகம் செய்தனர்.நேற்று துவங்கிய இருமுடி விழா, ஜனவரி 17ம் தேதி வரை நடைபெறும். ஜனவரி 18ல் தைப்பூச ஜோதியை, பங்காரு அடிகளார் ஏற்றி வைக்கிறார்.கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பக்தர்கள் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. விழா துவங்கி, முடியும் நாள் வரை, பக்தர்களுக்கு தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில்களை இயக்குகிறது.விழா ஏற்பாடுகளை, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், துணைத் தலைவர்கள் செந்தில்குமார், ஸ்ரீதேவி ரமேஷ் ஆகியோர் செய்கின்றனர்.