சபரிமலை மாஸ்டர் பிளான்; விரைவுபடுத்த தேவசம் போர்டு முடிவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19டிச 2021 09:12
சபரிமலை: சபரிமலை வரும் பக்தர்களின் சிரமங்களை குறைக்கும் வகையில் மாஸ்டர் பிளான் திட்டங்களை விரைவுபடுத்த தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது.
சபரிமலை வரும் பக்தர்களின் சிரமங்களை குறைத்து அவர்களுக்கு வசதிகள் செய்வதற்காக மாஸ்டர் பிளான் திட்டம் தயாரிக்கப்பட்டது. இதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி எஸ். சிரிராஜன் தலைமையில் உயர்மட்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.ஆனால் திட்டங்களை செயல்படுத்துவது சவாலாக உள்ளது. கொரோனா பாதிப்புக்கு பின்னர் சபரிமலையில் வருமானம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதால் தற்போது புதிய திட்டங்களை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சன்னிதானத்தில் 6 கோடி ரூபாய் செலவில் புதிய பிரசாதம் மண்டபம், பம்பை -சன்னிதானம் ரோப்வே, 19.5 கோடியில் சந்திராங்கதன் ரோட்டையும், மாளிகை புறத்தையும் இணைக்கும் மேம்பாலம் உள்ளிட்ட எந்த பணிகளும் கடந்த சில ஆண்டுகளாக நடைபெறவில்லை.மாஸ்டர் பிளானில் முக்கிய திட்டம் ரோப்வே ஆகும்.
சன்னிதானத்திற்கு தேவையான பூஜை பொருள்கள் தயாரிப்பதற்கான பொருட்கள், உணவுப் பொருட்கள் பம்பையில் இருந்து சன்னிதானம் கொண்டுவருவதற்காக இந்த ரோப்வே திட்டம் தயாரிக்கப்பட்டது. ரயில் இந்தியா டெக்னிக்கல் அன்ட் எக்கனாமிக்ஸ் சர்வீசஸ் நிறுவனம் இதற்கான சர்வே நடத்தி பாதையை நிர்ணயித்தது. முதலில் 3.40 கி.மீ.யாக இருந்தது பின்னர் 2.90 கி.மீ.யாக சுருக்கி இறுதி செய்யப்பட்டது. பம்பை ஹில்டாப் மற்றும் மாளிகை புறத்தில் இதற்கான ஸ்டேஷன்கள் அமையும். இப்பணி கோல்கட்டாவில் தாமோதரன் ரோப் வே நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் இந்த திட்டங்களை விரைந்து செயல்படுத்த தற்போதைய தேவசம் போர்டு நிர்வாகிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.