சபரிமலையில் அப்பம் பிரசாதம் தட்டுப்பாடு: பக்தர்கள் அவதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20டிச 2021 01:12
சபரிமலை: சபரிமலையில் முக்கிய வழிபாடு பிரசாதமான அப்பம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். சபரிமலையில் முக்கிய வழிபாட்டு பிரசாதங்களில் ஒன்று அப்பம். இதை தயாரிப்பதற்கான பொருட்களை தேவசம் போர்டு வாங்கி கொடுத்து குத்தகைதாரர் மூலம் அப்பம் தயாரிக்கப்படுகிறது. ஒரு கவரில் 6 அப்பம் வீதம் தினமும்60 ஆயிரம் கவர் அப்பம் தயாரிக்க வசதி உள்ள நிலையில் தற்போது 30 ஆயிரம் கவர் அப்பம் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு அப்பம் தயாரிக்கும் காண்ட்ராக்ட் எடுத்தவரால் போதுமான ஊழியர்களை கொண்டு வர இயலவில்லை. 160 டிகிரி வரை சூடுள்ள அடுப்புகளின் பக்கத்திலிருந்து வேலை செய்ய முடியாததால் வந்த ஊழியர்களும் திரும்பி சென்றனர். இதனால் அப்பம் தயாரிப்பு பாதிக்கப்பட்டு பக்தர்களுக்கு கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மொத்தம் 10 கவுண்டர்களில் சில கவுண்டர்களில் மட்டுமே அப்பம் வழங்கப்படுகிறது. மொத்த எண்ணிக்கையில் அப்பம் வழங்கப்படமாட்டாது என்ற போர்டும் வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த விஷயத்தில் விசாரணை நடத்திய கேரள ஐகோர்ட் தற்போதைய குத்தகைதாரரை நீக்கிவிட்டு புதிய குத்தகைதாரரை நியமிக்க தேவசம் போர்டுக்கு அனுமதி வழங்கியது.நேற்று பணியில் இல்லாத அனைத்து பிரிவு தேவசம் ஊழியர்களும் அப்பம் பேக்கிங் பணியில் ஈடுபடுத்தப்பட்டு நிலைமையை சரி செய்ய முயற்சி நடந்தது.