கராச்சி : அண்டை நாடான பாகிஸ்தானின் கராச்சி அருகே ஹிந்து கோவிலில் சிலைகளை சேதப்படுத்தியவரை போலீசார் கைது செய்துள்ளனர். சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி ஹிந்துக்கள் உள்ளிட்டோர் போராட்டம் நடத்தினர்.
பாகிஸ்தானின் சிந்து மாகாணம் கராச்சி அருகே உள்ள நாராயண்புரா. இங்குள்ள நாராயண் கோவிலுக்கு முகேஷ் குமார் என்பவர் நேற்று முன் தினம் மாலை சென்றார். அப்போது சிலர் சுத்தியலால் அங்கிருந்த சுவாமி சிலைகளை உடைத்துக் கொண்டிருந்தனர். முகேஷ் மற்றும் அங்கிருந்த ஹிந்துக்கள் திரண்டு அந்தக் கும்பலை தடுத்தனர். இதற்கிடையில் போலீசாரும் வந்தனர். அந்தக் கும்பல் தப்பி ஓடியது. அதில் முகமது வாலேத் ஷபீர் என்பவர் மட்டும் பிடிபட்டார். அவரை கைது செய்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், சிந்து மாகாணத்தில் தான் ஹிந்துக்கள் உட்பட சிறுபான்மையினர் அதிகம் வசிக்கின்றனர். ஆனால் இங்கு மத தீவிரவாதிகளால் சிறுபான்மையினருக்கு அடிக்கடி அச்சுறுத்தல் ஏற்படுகிறது. தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக்கோரி போராட்டம் நடத்தினர். போலீஸ் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர். இது குறித்து பேசிய சிந்து மாகாண சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் கியான்சந்த் இஸ்ரானி, இதுபோன்ற சம்பவங்கள் சமூகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்துகின்றன. இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறேன். சிறுபான்மையின மக்களின் நலன் காக்கப்படும், என்றார்.