பதிவு செய்த நாள்
23
டிச
2021
04:12
தஞ்சாவூர்: கும்பகோணம் ஆதிகும்பேசுவர சுவாமி கோவிலில், மேற்கு பிரகாரத்திலுள்ள கும்பமுனி சித்தரின் ஜென்ம தின குருபூஜை விழா நடந்தது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் 18 சித்தர்களின் முதன்மையானவரும், ஸ்ரீ அகஸ்தியர் என்றழைக்கப்படுபவருமான, கும்பமுனி சித்தர், ஆதிகும்பேஸ்வரசுவாமி கோவிலின் மேற்கு பிரகாரத்தில் அருள் வழங்கி வருகிறார். கும்பமுனி சித்தரை வணங்குவதாலும், அவருக்கு முன்பாக அமர்ந்து தியானம் செய்வதாலும் மன அமைதியும், ஆன்மீக ஞானமும் கிடைக்கும்.மேலும், மனசஞ்சலமும், விரோத எண்ணங்களும் நீங்கும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்புகளும் வாய்ந்த கும்பமுனி சித்தரின் ஜென்ம நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரம் இன்று (23ம் தேதி) காவிரியாற்றின் திருமஞ்சன படித்துறையிலிருந்து யானை வாகனத்தில் புனித நீர் ஊர்வலமாக எடுத்து வந்து கும்பமுனி சித்தருக்கு மகாயாகமும், விஷேச அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, மாலை 6 மணிக்கு கும்பமுனி சித்தர் வீதி உலா நடைபெற்றது. முன்னதாக நேற்று விநாயகர், ஆதிகும்பேஸ்வரர், மங்களாம்பிகையம்மன், கார்த்திகேயர், குமரப்பர், ஆதிலிங்க சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. விழாவிற்கான, ஏற்பாடுகளை அகஸ்தியர் அறக்கட்டளை மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.