பதிவு செய்த நாள்
30
டிச
2021
12:12
புதுச்சேரி: மனம், வாக்கு, செயல் என்னும் முக்கரணங்களை எம்பெருமானிடம் ஒடுங்கி பூரண சரணாகதி செய்ய வேண்டும் என ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ரன் சொற்பொழிவாற்றினார்.
புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் மார்கழி மாத திருப்பாவை சொற்பொழிவு, தினமும் காலை 7:00 மணி முதல் 8:30 மணி வரை நடைபெற்று வருகிறது. நேற்றைய சொற்பொழிவில் முன்னாள் நீதிபதி ராமபத்ரன் உபன்யாசம் செய்ததாவது:திருப்பாவை 14வது பாசுரத்தில் திருப்பாணாழ்வாரை ஆண்டாள் துயில் எழுப்புகிறார். இந்த பாசுரத்தில் ஆத்மகுண பூர்த்தி எனப்படும் உள்ளுறை பொருளாக கூறப்பட்டுள்ளது. நேரடியாக கண்டு உணர்வது, ஏற்கனவே உணர்ந்து அறிந்தவற்றால் அனுமானித்து உணர்வது, வேதங்களும் சாஸ்திரங்களும் உணர்த்துவதை அறிவது என மூன்று பரிமாணங்களை, ஆண்டாள் 14வது பாசுரத்தில் சொல்லி உள்ளார். கர்ம பலன் என்பது மனம், வாக்கு, செயல் என்ற மூன்றையும் சார்ந்தது. மனம், வாக்கு, செயல் என்னும் முக்கரணங்களை எம்பெருமானிடம் ஒடுங்கி பூரண சரணாகதி செய்ய வேண்டும். எம்பெருமானிடம் எவ்வாறு சரணாகதி செய்ய வேண்டும் என்பதை, உள்ளம், உரை, செயல் உள்ள இம்மூன்றையும் உள்ளிக்கெடுத்து இறையுள்ள லொடுங்கே என்று நம்மாழ்வார் உபதேசித்துள்ளார். எதை மனதால் நினைக்கிறோமோ அதை வாக்கால் சொல்ல வேண்டும். அவ்வாறு சொன்னதையே செய்ய வேண்டும். உள்ளத்தில் எண்ணியதை கரவாது, வாயால் உரைப்பதே வாய்மையாகும்.வாய்மையால் உரைத்தவாறு மெய்யால் செயல் புரிவதே மெய்மையாகும். மனம், மொழி, மெய் ஆகிய முக்கருவிகளும் முரண்படாது, தத்தம் இயல்பில் நிற்பதே துாய்மை என்று வேதம் உரைக்கின்றது.அந்த முப்பொறி துாய்மைதான் திரிகரண சுத்தி. வேதம் உரைத்த இந்த தத்துவத்தை தான் ஆண்டாள் மீண்டும் மீண்டும் ஒவ்வொரு பாசுரத்திலும் ஏதோ ஒரு வகையில் உள்ளுறை பொருளாக உணருமாறு, முன்னோர் வகுத்த வழி நின்று அதை அருளியுள்ளார். இவ்வாறு அவர் சொற்பொழிவாற்றினார்.