சபரிமலை, ஜன.1– சபரிமலையில் மகரவிளக்கு கால நெய்யபிஷேகம் தொடங்கியது. நான்கு நாள் இடைவெளிக்கு பின்னர் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் நடத்தினர். மண்டலபூஜை முடிந்து கடந்த 26–ம் தேதி அடைக்கப்பட்ட நடை நேற்று முன்தினம் மாலை திறந்தது. அன்று பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. நேற்று அதிகாலை 2:00 மணி முதல் பக்தர்கள் பம்பையில் இருந்து மலையேற அனுமதிக்கப்பட்டனர்.
அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்ட போது தரிசனத்துக்கு பெரிய நடைப்பந்தலில் நீண்ட கியூ காணப்பட்டது. மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறக்க, தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு அபிேஷகம் நடத்தி நெய்யபிேஷகத்தை தொடங்கி வைத்தார். பின்னர் கணபதிேஹாமம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடைபெற்றது. நேற்று தொடங்கிய நெய்யபிேஷகம் வரும் 18–ம் தேதி வரை நடைபெறும். பக்தர்கள் நேற்று நிலக்கல், பம்பை வழி மட்டுமல்லாமல் எருமேலி, அழுதை, கரிமலை வழியாகவும் வர தொடங்கியுள்ளனர். பெருவழிப்பாதையில் வனத்துறையினர் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். யானை உள்ளிட்ட வன விலங்குகளால் பக்தர்களுக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க விழிப்புணர்வு பிரச்சாரமும் மேற்கொள்ளப்படுகிறது. முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்களுக்காக ஸ்பாட் புக்கிங் வசதி எருமேலி மற்றும் பமபையில் தொடர்ந்து செயல்படுகிறது. வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பம்பை முதல் சன்னிதானம் வரையிலான இரண்டு பாதைகளிலும் கூடுதல் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. நீலிமலை, அப்பாச்சிமேடு செங்குத்தான பாதையில் பக்தர்கள் நிதானமாக மலையேற வேண்டும் என்று டாக்டர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இன்று ஆங்கில புத்தாண்டு தரிசனத்துக்கு அதிகாலையில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் அதற்கேற்ப கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.