புத்தாண்டில் சபரிமலையில் அலைமோதியது பக்தர் கூட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜன 2022 12:01
சபரிமலை: புத்தாண்டு தினத்தில் ஐயப்பனை கண்டு வணங்கிட சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கற்பூர தீபம் ஏற்றி சபரிமலையில் பக்தர்கள் புத்தாண்டை வரவேற்றனர். மகரவிளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை நடை கடந்த 30-ம் தேதி திறந்தது. 31-ம் தேதி முதல் நெய்யபிேஷகம் நடைபெற்று வருகிறது. புத்தாண்டு தினமான நேற்று அதிகாலையில் 18-ம் படியேறி ஐயப்பனை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. எங்கு பார்த்தாலும் பக்தர்கள் தலைதான் தென் பட்டது. 18-ம் படியேறுவதற்கான கியூ சரங்குத்தியை தாண்டி காணப்பட்டது. சபரிமலையில் பணிபுரியும் ஊழியர்கள் கற்பூர தீபம் ஏந்தி மரக்கூட்டம் வரை சென்று பக்தர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து வரவேற்றனர். 18-ம் படிக்கு கீழ் பகுதியில் 2022-ஐ வரவேற்கும் வகையில் கற்பூர தீபம் ஏற்றப்பட்டிருந்தது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசாரும் தகுந்த முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்திருந்தனர். நேற்று முன்தினம் ஒரே நாளில் 46 ஆயிரத்து 161 பேர் தரிசனம் நடத்தினர். இதில் 1330 பேர் பெருவழிப்பாதை வழியாக பம்பை வந்தனர்.