பதிவு செய்த நாள்
05
ஜன
2022
04:01
சென்னை: கிராமக் கோவில் பூசாரிகளுக்கு மாத ஓய்வூதியம் வழங்க உத்தரவு பிறப்பித்த முதல்வர் ஸ்டாலினுக்கு, கிராமக் கோவில் பூசாரிகள் பேரவை நிறுவனரும், நிர்வாக அறங்காவலருமான எஸ்.வேதாந்தம் நன்றி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த டிசம்பர், 24ல் நடந்த கிராமக் கோவில் பூசாரிகளின் ஓய்வூதியக்குழு கூட்டத்தில், பூசாரிகளுக்கு மாத ஓய்வூதியம் வழங்க முடிவு செய்து, அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக கிராமக் கோவில் பூசாரிகளின் நலனுக்காக தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். அதனால், ஸ்டாலின் பிறப்பித்த உத்தரவை, எங்களின் பெரும் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகவே கருதுகிறேன்.
கடந்த 2001ல், மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்த கிராமக் கோவில் பூசாரிகள் மாநாட்டில், அப்போதைய முதல்வர் கருணாநிதி பங்கேற்று, பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியதை நினைவு கூறுகிறேன். இந்நிலையில், டிச., 12ல் நடந்த மதுரை மாவட்ட பூசாரிகளின் மாநாட்டில், 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில், பூசாரிகளின் ஓய்வூதிய விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, உடனடியாக ஓய்வூதியம் கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானம் அரசின் கவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவற்றையெல்லாம் ஏற்று உத்தரவு பிறப்பித்த முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபு ஆகியோருக்கு நன்றி.இவ்வாறு வேதாந்தம் கூறியுள்ளார்.