பதிவு செய்த நாள்
05
ஜன
2022
03:01
சென்னை: வடபழனி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக மூலஸ்தான பாலாலயம் நடந்தது. இதில் கலந்துகொண்ட இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கோவில் தக்கார் எல்.ஆதிமூலம், இணை கமிஷனர் ரேணுகா தேவி மற்றும் அதிகாரிகள் சங்கல்பம் செய்துகொண்டனர்.
பிரசித்தி பெற்ற சென்னை வடபழநி ஆண்டவர் கோவிலில் கும்பாபிஷேம் நடக்க முடிவு செய்யப்பட்டு, கடந்த ஆண்டு மார்ச் மாதம் பாலாலயம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, திருப்பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கோவில் நிறைவுபெறும் தருவாயில் உள்ள திருப்பணிகளை டிச.09ல் பார்வையிட்டார். பின், பத்திரிக்கையாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: வடபழநி ஆண்டவர் கோவில் பழமை வாய்ந்தது. இக்கோவிலின் கும்பாபிஷேகம், 2007ல் நடந்தது. அதன் பிறகு ஆகம விதிப்படி, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும்.
எனவே, கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் விரைவுப்படுத்தப்பட்டன. தற்போது, திருப்பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த திருப்பணிக்காக, கோவில் தக்கார் எல்.ஆதிமூலமும், ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரனும் பெரும் முயற்சி எடுத்துக் கொண்டனர். இதையடுத்து, ஜன.,23ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவிலில் உள்ள தியான மண்டபம், அபிஷேக மண்டபம், மடப்பள்ளி உள்ளிட்ட மண்டபங்கள் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளன. 33 அடி உயர தங்கத்தகடு வேயப் படும் கொடிமரம், அழகிய வடிவில் இடம் பெற உள்ளது .இக்கோவிலின் மரத்தேர், தங்கத்தேர் அழகுற புதுப்பிக்கப்பட்டு, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை தேவைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளது. கோவில் கும்பாபிஷேகத்திற்காக இன்று (5ம் தேதி) மூலஸ்தான பாலாலயம் நடந்தது. இதில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கோவில் தக்கார் எல்.ஆதிமூலம், இணை கமிஷனர் ரேணுகா தேவி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டு சங்கல்பம் செய்து கொண்டனர். பக்தர்கள் சமூக இடைவெளியுடன் தரிசனம் செய்தனர்.