பதிவு செய்த நாள்
15
ஜன
2022
06:01
பல்லடம்: பெண் குழந்தைகளை தெய்வமாக நினைத்து வழிபடும் பூ பொங்கல் நிகழ்ச்சி, பல்லடம் அருகே நேற்று கொண்டாடப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த கரைப்புதூர் ஊராட்சி நொச்சிபாளையம் கிராமத்தை சேர்ந்த அருண்குமார்- நித்தியா தம்பதிகளின் குழந்தைகள் கீர்த்தன்யா, 7, மற்றும் சிவன்யா, 3 ஆகியோர் குடும்பத்துடன் வசிக்கின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பெண்களை தெய்வமாக நினைத்து வழிபடும் பூ பொங்கல் வழிபாட்டை குடும்பத்தினர் கொண்டாடினர். இது குறித்து அருண்குமார் கூறுகையில், விவசாய தொழில் சிறக்கவும், உணவு உயிர்களுக்கு ஆதாரமாக இருக்கும் சூரியன், மற்றும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கவே தை பொங்கல், மற்றும் மாட்டுப் பொங்கல் உள்ளிட்டவை கொண்டாடப்படுகிறது. காணும் பொங்கல் தினத்தில் இறைவனை வழிபட்டு, பூ பறிக்கும் நிகழ்ச்சி நடக்கும். இதில் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஒன்றாக சந்தித்து மகிழ்வதன் அடிப்படையில் காணும் பொங்கல் என பெயரிடப்பட்டது. நாகரீகம் வளர்ந்ததால் இந்த நடைமுறைகள் மறைந்துவிட்டன. அவ்வாறு, பெண்களை தெய்வமாக வணங்கும் பூ பொங்கல் வழிபாட்டை நாங்கள் கடைபிடித்து வருகிறோம். இதன்படி, குடும்பத்தில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு முதல் ஆண்டு பொங்கல் பானை வாங்கி கொடுத்து பொங்கல் வைத்து இறைவனை வழிபடுவோம். பின், ஆண்டுதோறும் அப்பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்து கொள்வர். மார்கழி மாதம் முழுவதும் வீட்டுக்கு வெளியே சாணத்தில் செய்து வைத்த பிள்ளையாரை சேகரித்து வைத்து பூ பொங்கல் நாளில் வழிபடுவோம். பின்னர், பிள்ளையாரை கிணறு அல்லது வாய்க்காலில் கரைத்து விடுவோம். இது முழுக்க முழுக்க பெண் குழந்தைகளுக்காக நடக்கும் வழிபாட்டு முறையாகும் என்றார்.