பதிவு செய்த நாள்
22
ஜன
2022
10:01
சென்னை: திருப்போரூர் கந்தசுவாமி கோவில் மற்றும் மாமல்லபுரத்தில் உள்ள ஆளவந்தார் கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஏப்ரலுக்குள் அகற்றி, அறிக்கை தாக்கல் செய்ய, அறநிலையத்துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்போரூர் கந்தசுவாமி கோவில் மற்றும் மாமல்லபுரம் ஆளவந்தார் கோவிலுக்கு சொந்தமாக, 2,000 ஏக்கர் நிலம் உள்ளதாகவும், இவற்றில் சில ஆக்கிரமிப்பில் இருப்பதாகவும், இந்த சொத்துக்களை அளவீடு செய்து பாதுகாக்கவும் கோரி, வழக்கறிஞர் ஜெகநாத், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இக்கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை, பத்திரப்பதிவு செய்ய தடை விதித்தது. மேலும், நிலங்களை அளவீடு செய்யவும் உத்தர விட்டிருந்தது. இவ்வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய முதல் பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு பிளீடர் முத்துகுமார் ஆஜராகி, நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு, அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், சிறப்பு பிளீடர் சந்திரசேகரன் ஆஜராகி, கோவில் நிலங்களை பத்திரப்பதிவு செய்ய முடியாது. ஆக்கிரமிப்பை அகற்ற, அறநிலையத்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்றார். இதையடுத்து, கோவில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை, ஏப்ரல் மாதத்துக்குள் அகற்றி, அறிக்கை தாக்கல் செய்யும்படி, அறநிலையத்துறைக்கு முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.