திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு நடந்த அத்யயன உற்ஸவம் நிறைவடைந்தது.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 21 நாட்கள் அத்யயன உற்ஸவம் நடைபெறும். பகல்பத்து உற்ஸவம் ஜன.3 ல் துவங்கியது. தினசரி காலை பெருமாள் ஆண்டாள் சன்னதி எழுந்தருளலும், சுவாமி பரமபதவாசல் எழுந்தருளலும் நடந்தது. திருமங்கையாழ்வாருக்கு மோட்சம் அருளி பகல் பத்து உத்ஸவம் ஜன.12 ல் நிறைவடைந்தது. ஜன.,13 இரவு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இரவு 8:00 மணி அளவில் பெருமாள் தேவியருடன் சொர்க்கவாசல் எழுந்தருளினார். மறுநாள் முதல் ராப்பத்து உற்ஸவம் துவங்கியது. இன்று காலை நிறைவு நாளை முன்னிட்டு காலை 10:10 மணிக்கு பெருமாள் தயார், ஆண்டாளுடன் புறப்பாடாகி பரமபாதவாசல் எழுந்தருளினார். தொடர்ந்து யாகசாலையிலிருந்து புறப்பாடான கலச நீரால் பெருமாள்,தாயார், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோரு்கு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து ஏகாதசி மண்டபத்தில் பத்தி உலாத்துதல் நடந்தது. மாலையில் நம்மாழ்வார் திருவடி தொழுதல் நடந்தது. தொடர்ந்து ஆழ்வார்கள் இருப்பிடம் சேர்க்கை நடந்தது. அரண்மனை மண்டகப்படியை முன்னிட்டு பரிவட்டம். மரியாதைகள் வழங்கப்பட்டு கோஷ்டி பிரபந்தத்துடன் உற்ஸவம் நிறைவடைந்தது.