பதிவு செய்த நாள்
24
ஜன
2022
02:01
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஜோதிபுரத்தில் அருள்மிகு பாலமுருகன், ஜோதி விநாயகர் திருக்கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது.
இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இத்திருக்கோவில், கட்டுமானப்பணி முடிந்து, கும்பாபிஷேக விழா கடந்த, 20ம் தேதி விநாயகர் வழிபாட்டுடன் துவங்கியது. ரேணுகாதேவி திருக்கோயிலில் இருந்து, முளைப்பாரிகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில், யாக குண்டங்களில் வேள்விகள் நடந்தன. நேற்று காலை, 7:00 மணி அளவில் சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, புனித நீர் அடங்கிய குடங்கள், கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. காலை, 10:00 மணி அளவில் கோவிலில் விமானக் கலசத்துக்கு சிவாச்சாரியார்கள், புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். பின்னர், பேரொளி வழிபாடு, அன்னதானம், வள்ளிதிருமணம் ஆகியன நடந்தன. விழாவில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். வேள்வி வழிபாடுகளை வாட்போக்கியார் மற்றும் உமையொருபாகன் வழிபாட்டு குழுவினர் நடத்தினர். விழா ஏற்பாடுகளை, கோவில் திருப்பணி குழுவினர், நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.