பதிவு செய்த நாள்
27
ஜன
2022
01:01
பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள மசராய பெருமாள் கோவிலுக்கு, பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் இருந்தும் இக்கோவில், பராமரிப்பில்லாமல் புதர் மண்டி, பாழடைந்து கிடக்கிறது.நரசிம்மநாயக்கன் பாளையம் பழைய ஊரில், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மசராய பெருமாள் கோவில் உள்ளது. ஓடுகள் வேயப்பட்ட கோவிலில், மசராயப்பெருமாள், மரச்சிலை வடிவில் அருள்பாலிக்கிறார்.
ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை ராக்கிபாளையம், புதுப்பாளையம், பூச்சியூர் உள்ளிட்ட, 18 கிராமங்களில் உள்ள மக்கள் ஒன்றுகூடி, இக்கோவிலில் விழா நடத்துவது வழக்கம். அப்போது, மசராய பெருமாள் சுவாமி வெள்ளை நிறக் குதிரையில், 18 கிராமங்களின் வழியாக வந்து கோவிலை அடைவது, இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சம். கடந்த, 60 ஆண்டுகளில், இதுவரை ஒருமுறை மட்டுமே, மசராய பெருமாள் கோவிலில், நோன்பு சாட்டப்பட்டுள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான, 3.55 ஏக்கர் நிலம் நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ளது. இதன் இன்றைய மதிப்பு பல கோடி பெறும். ஆனாலும், இக்கோவிலில் நித்திய பூஜைகள், அனுஷ்டானங்கள் அனுசரிக்கப்படுவதில்லை. இதனால், மசராய பெருமாள் கோவில் பக்தர்கள் பெரும் வேதனைக்கு உள்ளாகி வருகிறார்கள்.இதுகுறித்து, நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி முன்னாள் தலைவர் ஆனந்தன் கூறுகையில்,"மசராயர் என்ற முனிவர் இங்கு தியானம் செய்து வந்ததாகவும், அவர் முக்தி அடைந்த பிறகு, அவரின் நினைவாக இக்கோவில் கட்டப்பட்டதாக, செவிவழிச் செய்திகள் கூறுகின்றன. கோவில் மொத்தமாக எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோவிலை புனரமைத்து, புதியதாக கட்ட, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.