பதிவு செய்த நாள்
02
பிப்
2022
03:02
திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே 4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்கால கல் ஈம திட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் அருகே குடகனாறு பாசன வாய்க்கால் பகுதி கலா என்பவரின் தோட்டத்தில் கல்திட்டை இருப்பதை அறிந்து, திண்டுக்கல் வரலாற்று ஆய்வுக்குழு ஆய்வாளர் விஸ்வநாததாஸ், தளிர் சந்திரசேகர், வரலாற்று மாணவர் ரத்தினமுரளிதர், ஆசிரியர்கள் கண்ணன், லெமூரியன் குரு ஆய்வு செய்தனர். அவர்கள் கூறியதாவது: பெருங்கற்கால கல் ஈம திட்டை 4000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. பெருங்கற்காலம் வரலாற்றின் தொடக்கமாகவும், கற்காலத்தில் இறுதி காலமாகவும் இருந்தது. இக்காலத்தில் மனிதன் கூட்டமாக உலகின் பல பகுதிகளில் வாழ்ந்தான். அது போன்ற மனித கூட்டங்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் வாழ்ந்தார்கள்.
கூட்டத்தின் தலைவன் இறந்து விட்டால் அவன் உடலை புதைத்து அதைச்சுற்றி குறியீடுகள் வைப்பர். இவை கல் வட்டம், கல் பதுகை, கல் திட்டை, நெடுங்கல், கல்குவை என பல வகைப்படும்.இதில் இறந்தவரின் கல்திட்டை என்பது இறந்தவரின் உடலை பூமியில் புதைத்து உடலை சுற்றி நான்கு புறமும் பலகை கற்கள் ஊன்றி அதன் மேல் மிகப்பெரிய பலகை கற்களை வைத்தனர். இந்த ஈம கல்திட்டைகள் சதுரம், செவ்வகம் வடிவில் இருக்கும். ஒரு சில இடங்களில் கிழக்கு பக்கம் பலகைகள் இல்லாமலும் இருக்கும்.நாங்கள் தோட்டத்தில் பார்த்த கல் திட்டை எந்த சேதமும் இல்லாமல் உள்ளது. தெற்கு, வடக்கு திசையில் திசைக்கு இரண்டாக 4 அடி நீள இரு பலகை கற்களும், தரையில் ஊன்றி நிற்க வைக்கப்பட்டுள்ளன. கிழக்கு, மேற்கு திசையில் தலா 4 பலகை கற்கள் வரை ஊன்றப்பட்டுள்ளது. இதன் மேலே 8 டன் எடை கொண்ட 6 அடி நீளம், 5 அடி அகலம் கொண்ட பெரிய பலகை கற்களாலும் அதற்கடுத்து 6 டன் எடை கொண்ட 5 அடி நீளம், 5 அடி அகலம் கொண்ட பெரிய பலகைகளாலும் மூடப்பட்டுள்ளது. இந்த இரண்டு கற்களும் ஒன்றரை அடி உயரம் கொண்டவை. கீழுள்ள பலகை கற்கள் ஓரடி உயரம் கொண்டவை. இதன் பொருள் விளங்காத மக்கள் பிற்காலத்தில் கிழக்கு பலகைகளை பெயர்த்து பார்த்திருக்கின்றனர், என்றனர்.