வேண்டும் வரம் கொடுக்கும் மேல்மலையனுார் அங்காளம்மன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16பிப் 2022 10:02
செஞ்சி: தமிழகத்தில் உள்ள அம்மன் திருத்தலங்களில் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் மிக முக்கியமானது. இங்குள்ள அங்காளம்மனை பல லட்சம் பேர் குலதெய்வமாக வணங்குகின்றனர். இதனால் சாதாரண நாட்களிலும் பக்தர்கள் வருகை ஆயிரக்கணக்கில் இருக்கும். மாதந்தோறும் நடக்கும் அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் பல லட்சம் பக்தர்கள் பங்கேற்கின்றனர். 13 நாள் நடக்கும் மாசி பெருவிழாவின் போது தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, மும்பை மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.
கோவில் ஸ்தல புராணத்தின்படி சிவபெருமானை போன்று ஐந்து தலைகளுடன் இருந்த பிரம்மன், சிவபெருமானுக்கு சமமானவராக தன்னை கருதி ஆணவம் கொள்கிறார். எனவே பிரம்மனின் ஒரு தலையை சிவ பெருமான் கிள்ளி எடுத்து விடுகிறார். இதை கண்டு கோபமடைந்த சரஸ்வதி தேவி பிரம்ம தேவனின் சிரசு சிவபெருமான் கரத்தில் ஒட்டி கொள்ளவும், சிவனுக்கு படைக்கும் உணவை அந்த சிரசு சாப்பிடும் என்றும் சாபமிடுகிறார். இதனால் உணவின்றி பித்தனாக காடு, மலைகளில் அலையும் சிவ பெருமான் மாசிமாதம் மகா சிவராத்திரியன்று மேல்மலையனுார் மயானத்தில் வந்து தங்குகிறார். மறுநாள் மயானத்தில் நடக்கும் மயானக்கொள்ளயைின் போது அங்காளம்மனாக இருக்கும் பார்வதி தேவி வீசும் உணவை எடுக்க சிவபெருமானின் கரத்தில் இருந்து விடுபட்டு தரைக்கு வரும் பிரம்ம கபாலத்தை விஸ்வரூபம் எடுத்து அங்காளம்மன் தனது காலால் பூமியில் அழுத்தி ஆட்கொள்கிறார். இதன் பிறகு சிவபெருமானின் சாபம் நீங்கி ஆனந்ததாண்டவம் ஆடுகிறார். விஸ்வரூபம் எடுக்கும் பார்வதி தேவியின் கோபத்தை தனிக்க தேர்வர்கள் 13 நாட்கள் விழா நடந்துகின்றனர். இந்த விழாவில் தேவர்கள் தேரின் பாகங்களாக இருப்பதாக ஐதீகம். இதனால் ஆண்டு தோறும் புதிதாக தேர் வடிவமைக்கின்றனர். தேவர்களின் விழாவால் மனம் குளிர்ந்த பார்வதி தேவி மேல்மலையனுாரில் அங்காளம்மனாக அமர்ந்து, நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டிய வரத்தை கொடுப்பேன் என தேவர்களிடம் உறுதியளிக்கிறார். இதன் படி வேண்டிய வரம் தந்து அருளும் சக்திமிக்க அம்மானாக மேல்மலையனுார் அங்காளம்மனை பக்தர்கள் வணங்கி வருகின்றனர்.