பதிவு செய்த நாள்
16
பிப்
2022
10:02
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவில் மாசி மக பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருக்கல்யாணம் நடந்தது. மணக்கோலத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காரமடை அரங்கநாதர் கோவில் தேர் திருவிழா, 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும் அரங்கநாதப் பெருமாள், ஒவ்வொரு வாகனத்தில் உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று காலை கோவிலில் இருந்து, பெட்டதம்மன் மலைக்கு பக்தர்கள் மற்றும் அர்ச்சகர்கள் சென்றனர். அங்கு சிறப்பு பூஜைகள் செய்து, மலையிலிருந்து அம்மனை அழைத்து வந்தனர். அப்போது ஏராளமான பக்தர்கள் சாலையில் தேங்காய்களை உடைத்து நேர்த்திக் கடனை செலுத்தினர். பெட்டதம்மனை, அரங்கநாத பெருமாள் சார்பில், எதிர்கொண்டு அழைக்கும் விதமாக, கோவில் அர்ச்சகர் திருவேங்கடம், ராம பணத்தை எடுத்துச் சென்று, கோவிலுக்கு அம்மனை அழைத்து வந்தார். இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று அதிகாலை, 5:30 மணிக்கு கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. மணக்கோலத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாளை காலை, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக, அரங்கநாத பெருமாள், தேருக்கு எழுந்தருளுகிறார். அதை தொடர்ந்து மாலை, 4:00 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் லோகநாதன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.