தஞ்சாவூர்: மாசி மகத்தை முன்னிட்டு இன்று (17ம் தேதி) காலை கும்பகோணம் சக்கரபாணி கோவிலில் திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரின் வடம்பிடித்து இழுத்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், காவிரி தென்கரையில் திருமழிசை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்றதும், பிரம்மதேவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு செய்யப்பட்டதுமான, சக்கரபாணி சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இத்தகைய சிறப்பு பெற்ற இக்கோவிலில் மாசி மக விழா சிறப்பாக ஆண்டு தோறும் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இவ்விழாவினை முன்னிட்டு, கடந்த பிப்.9ம் தேதி பத்துநாள் உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் 5ம் நாளான 12ம் தேதி கருட வானத்தில் ஓலைச்சப்பரம் உள்ளிட்ட வீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான இன்று காலை சக்கரபாணிசுவாமி சுதர்சனவல்லி, விஜயவல்லி தாயாருடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினர். பின்னர் காலை 8.30 மணியளவில் தேருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதையடுத்து கும்பகோணம் எம்.எல்.ஏ., அன்பழகன் தேர் வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடக்கி வைத்தார். இதில் கோயில் பணியாளர்கள், உபயதாரர்கள், பக்தர்கள் என நூற்றுக்கணக்கானோ் தேர் வடம்பிடித்து இழுத்தனர்.