பதிவு செய்த நாள்
25
பிப்
2022
11:02
பெரம்பலுார்: வரும் 1ம் தேதி கொண்டாடப்பட உள்ள மகா சிவராத்திரி இந்து சமய அறநிலைத்துறை சார்பில், தமிழகம் முழுதும் உள்ள சிவாலயங்களில் கொண்டாட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவனடியார்கள் தமிழக அரசுக்கு கோரிக்கைவிடுக்கின்றனர்.
பிரளய காலத்தில் பிரம்மனும், அவரால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவன்களும் அழிந்து விட்டன. அந்த மோசமான இரவுப் பொழுதில், அன்னை உமாதேவி, சிவபெருமானை நினைத்து விரதமிருந்து பூஜித்து வந்தார். அதோடு, இரவில் நான்கு ஜாமங்களிலும் ஆகம விதிப்படி சிவனுக்கு உரிய அபிஷேக, அலங்கார, அர்ச்சனை செய்து வழிபட்டார். வழிபாட்டின் முடிவில் அம்பிகை சிவனை வணங்கி வேண்டிக் கொண்டார். தான் பூஜித்த இந்த இரவு, ‘சிவராத்திரி’ என்று கொண்டாடப்பட வேண்டும். அப்படிப்பட்ட அற்புத நாளில் தேவர்களும், மனிதர்களும் சிவ ராத்திரி என்ற பெயரில் ஈசனை விரதமிருந்து வழிபடும் முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மகா சிவராத்திரி இந்துக்களால் கொண்டாடப்படக்கூடிய முக்கிய விரத நாளாகும். மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தி தினத்தில் மகா சிவராத்திரி கடைப்பிடிக்கப்படுகிறது. நாம் சிவராத்திரி தினத்தில் விரதமிருந்து சிவபெருமானை வழிபட்டால் நாம் செய்த பாவங்கள் நீங்கி, நமக்கு முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம். மாதம் ஒருமுறை மாத சிவராத்திரி வந்தாலும், மாசி மாதத்தில் தேய்பிறையில் வரக்கூடிய சதுர்த்தி திதியில் மகா சிவராத்திரி சிறப்பு வாய்ந்ததாகும்.
இதன்படி, இந்தாண்டுக்கான மகா சிவராத்திரி வரும் 1ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்று அதிகாலை 2.51 மணி வரை திரியோதசி பின்பு சதுர்த்தி திதி வருவதால், மார்ச் 1ம் தேதி செவ்வாய்க் கிழமை அன்று நாள் முழுதும் விரதமிருந்து, அன்றைய தினம் இரவில் துாங்காமல் கண் விழித்து சிவ பெருமானுக்கு நடக்கும் அபிஷேக, அலங்கார, பூஜை ஆராதனைகளைக் கண்டு பயனடைய வேண்டும். இவ்வளவு சிறப்புமிக்க மகா சிவராத்திரி விழாவை, தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அரசு விழாவாக கொண்டாட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதோடு, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சிவாலயங்களில் மட்டுமல்லாமல், ஒவ்வொரு குக்கிராமத்திலும் உள்ள சிவாலயங்கள் மற்றும் பாடல் பெற்ற 274 சிவாலயங்கள் உட்பட அனைத்து சிவாலயங்களிலும் மகா சிவராத்திரி கொண்டாடப்பட ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த சிவாலயங்கள் உள்ள கிராமங்களுக்கு செல்லும் சாலைகளில் பெயர் பலகை வைத்து சுற்றுலா பயணிகள் வந்து வழிபட வழிவகை செய்ய வேண்டும். மகா சிவராத்திரி கொண்டாடுவதற்காக, வருமானமின்றி உள்ள அனைத்து கிராம கோவில்களுக்கும் அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால், பக்தர்களுக்கு பாவங்கள் நீங்கி முக்தி கிடைப்பதுடன், புதர் மண்டி கிடக்கும், பாரம்பரிய கலைநயமிக்க குக்கிராம கோவில்களும் துாய்மை செய்யப்பட்டு, சிதிலமடைவதில் இருந்து பாதுகாக்கப்படும். உள்ளூர் பொதுமக்கள் சிவனை வழிபட்டு நன்மை அடைவர். ஆகவே, மகா சிவராத்திரி விழாவை அரசு விழாவாக கொண்டாடப்பட வேண்டும் என்பதே சிவனடியார்கள் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.