வடமதுரை: வடமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணி துவக்கமாக பாலாலய பூஜை நேற்று நடந்தது.
தமிழ்நாட்டில் பல கோயில்கள் சிதலமடைந்து பராமரிப்பு, கால முறையில் கும்பாபிஷேகம் நடத்தப்படாமலும் இருப்பது குறித்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அமைக்கப்பட்ட குழுவிடம் வடமதுரை மீனாட்சிசுந்தரேசுவரர் கோயிலின் நிலை குறித்து புகைப்படங்களாக பதிவு செய்து வழங்கப்பட்டது.
400 ஆண்டு பழமையானதாக இருக்கலாம் என்பதால் தொல்லியல் துறை உடனே திருப்பணிக்கு அனுமதி தரவில்லை. கோயில் திருப்பணி செய்வதில் ஆர்வமாக இருந்த உள்ளூர் நன்கொடையாளர்கள் முயற்சிகளை கைவிடாமல் தொடர்ந்தனர். இதன் பலனாக நீண்ட இழுபறிக்கு பின்னர் ஒருவழியாக கடந்த ஜனவரியில் சென்னை ஹிந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தின் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து துறை சார்ந்த பொறியாளர்கள் திருப்பணிக்காக மதிப்பீடு தயாரித்தனர். இப்பணி முடிந்ததையடுத்து நேற்று திருப்பணி துவக்கமாக பாலாலய பூஜை நடந்தது. திருப்பணி நன்கொடையாளர்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.