பதிவு செய்த நாள்
16
ஜூலை
2012
02:07
விருந்தும், மருந்தும் மூன்று நாளைக்கு மேல் இருந்தால் தொல்லை தான் என்பது இந்த காலத்து பழமொழி இல்லை, 100 ஆண்டுக்கு முன்பே சொல்லி வைக்கப்பட்டது தான், காரணம் இரண்டுமே ரொம்ப நாளைக்கு நீடித்தால் தனிமனிதனுக்கு இழப்பு, இங்கு விருந்து என்பது விருந்தினர்களையும் மருந்து என்பது நோய்களுக்கான மருந்து, இவையெல்லாம் வந்து உடனே செல்லும் அளவில் இருப்பதே நல்லது என்ற பொருளில் தான் சொல்லப்படுகிறது, 2000 ஆண்டுகளுக்கு முன்பு மோப்பக் குழையும் அனிச்சம், நோக்கக் குழையும் விருந்து என்ற குறளில் முகம் காட்டுவது விருந்தினர்களையும் அவர்களது உறவையும் கெடுத்துவிடும் என்பது வள்ளுவர் வாக்கு, அவர் காலத்தில் விருந்தினர்கள் தொலைவில் இருந்து வந்தவர்களாக இருந்திருக்கக் கூடும், தவிர அவர்களுக்கான பணிவிடை என்பது உணவும் உறைவிடமும் கொடுத்து உதவுவது என்ற அளவில் தான் இருந்திருக்கும். பின்னர் நூற்றாண்டுகளின் மாற்றங்களில் விருந்தினர்கள் மூன்று நாளைக்கு மேல் தங்குவது தொல்லை தான் என்றே உணர்ந்து பழமொழி வடிவெடுத்திருக்கிறது.
ஒருவீட்டுக்கு விருந்தினராகச் செல்கிறோம் என்றால், காலையில் போய் விட்டு மாலைக்குள் திரும்பி விடுவது தான் மரியாதை. மீறி தங்கினால், தேவையற்ற கருத்து வேறுபாடுதான் வரும். பெற்றவர்கள் கூட, பிள்ளைகள் வீட்டில் குறைந்த நாள் தான் தங்க வேண்டிய சூழல் இருக்கிறது. விலைவாசி மற்றும் குடும்பச்சூழல் அப்படி! ஒரு கதையைக் கேளுங்க! ஒரு வாத்து முட்டைகளை குஞ்சு பொரித்தது. எப்படியோ, அன்னப்பறவையின் முட்டை ஒன்றும் அதனுள் கலந்து விட்டது. குஞ்சு பொரித்ததும், மற்ற குஞ்சுகள் சுமாரான நிறத்தில் இருந்தன. அன்னப்பறவை குஞ்சு மட்டும் வெள்ளை வெளேரென இருந்தது. அது மட்டுமல்ல! வாத்துக்கள் சாய்ந்து சாய்ந்து நடந்தன. அன்னப்பறவையின் நடையழகோ அபாரமாய் இருந்தது. இதைக் கண்ட தாய் வாத்தும், மற்ற குஞ்சுகளும் அன்னக்குஞ்சு மீது பொறாமை கொண்டன. தேவையில்லாமல் அதைத் தொந்தரவு செய்தன. கொத்திக் காயப்படுத்தின. அப்போது, அன்னப்பறவை கூட்டம் ஒன்று அங்கு வந்தது. தங்கள் குஞ்சு ஒன்று வாத்துக் கூட்டத்துடன் இருப்பதைப் பார்த்து, ""அன்னக்குஞ்சே! நீ எங்கள் இனமல்லவா! மந்த புத்தியுள்ள இந்த வாத்துகளுடன் ஏன் இருக்கிறாய். இதோ! இந்த நீர் நிலையில் உன் உருவத்தைப் பார். எங்களைப் போலவே இருப்பாய், உயரத்தில் பறக்கும் சக்தியும் உனக்கு உண்டு என்றன. அப்போது தான் அன்னக்குஞ்சுக்கு, தான் ஏன் துன்புறுத்தப்பட்டோம் என விளங்கியது. அது தன் இனத்துடன் சேர்ந்து பறந்து விட்டது. அவரவர் இடத்தில் இருந்தால் தான் அவரவருக்கு மதிப்பு! தெரியாமல் வந்த அன்னக்குஞ்சுக்கே அந்தக்கதியென்றால், தெரிந்தே விருந்தினர் இல்லங்களுக்குச் செல்பவர்களுக்கு என்ன கதி வரும் என சொல்லியா தெரிய வேண்டும்! விருந்தும் மருந்தும் மூன்று நாள் என்பது அந்தக்காலத்திலேயே இருக்கிறபழமொழி. அப்போதேஅப்படி என்றால், இப்போது...!