பதிவு செய்த நாள்
22
மார்
2022
08:03
தஞ்சாவூர் : ராகு தோஷ பரிகார தலமாக விளங்கும், திருநாகேஸ்வரத்தில், நேற்று நடந்த ராகு பெயர்ச்சி விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து, ராகு பகவானை தரினம் செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்த திருநாகேஸ்வரத்தில், ராகு பகவான் சிவபெருமானை பூஜித்த திருத்தலமாக, கிரிகுஜாம்பிகை உடனாய நாகநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது.புராண காலத்தில், சுசீல முனிவரின் குழந்தையை, பாம்பாகிய ராகு தீண்டியதால், ராகுவிற்கு சாபம் ஏற்பட்டது. சாபம் நிவர்த்தி பெற, நான்கு தலங்களில் வழிபட்டு, நிறைவாக திருநாகேஸ்வரத்தில் உள்ள நாகநாத சுவாமியை, மகாசிவராத்திரி அன்று வழிபட்டு, சாபம் நீங்கப் பெற்றார் ராகு.நவக்கிரகங்களுள் முதன்மையானவராக திகழும் ராகு பகவான் நாகவல்லி, நாகக்கன்னி என இரு துணைவியருடன், மங்கள ராகுவாக இத்தலத்தில் அருள்பாலிக்கிறார்.
ராகு பகவான் ஒன்றரை ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து, மற்றொரு ராசிக்கு பின்னோக்கி நகர்வதை ராகுப் பெயர்ச்சி என்கின்றனர். இதன்படி, நேற்று ராகு பகவான் ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதையொட்டி, நேற்று காலை 10:30 மணிக்கு, யாகசாலை பூஜை நடந்தது. பிற்பகல் 2:30 மணிக்கு புனித நீர் அடங்கிய கடங்கள், மங்கள வாத்தியத்தோடு புறப்பட்டு, சன்னிதியை அடைந்தன. பால், மஞ்சள், சந்தனம், தயிர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால், ராகு பகவானுக்கும், நாகவள்ளி மற்றும் நாகக்கன்னிக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.சரியாக பிற்பகல் 3:13 மணிக்கு, ராகு பகவான் பெயர்ச்சி அடைந்ததும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மாலையில், ராகு பகவான் வெள்ளி சேஷ வாகனத்தில் வீதியுலா புறப்பாடு நடந்தது.
ராகு பெயர்ச்சியை முன்னிட்டு, 23 முதல் 26ம் தேதி வரை லட்சார்ச்சனை நடக்கிறது. ராகு பெயர்ச்சியை முன்னிட்டு மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்ய குவிந்தனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா உட்பட பல ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதனால், நேற்று திருநாகேஸ்வரம் நகரமே திக்குமுக்காடியது.
திருப்பாம்புரம்: திருவாரூர் மாவட்டம், பேரளம் அருகே, திருப்பாம்புரம் வண்டுசேர் குழலி உடனுறை சேஷபுரீஸ்வர் கோவிலில், தனி சன்னிதியில், ராகு, கேது ஏக சரீரமாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். இக்கோவிலுக்கு தென் காளஹஸ்தி என்ற பெயரும் உண்டு. நேற்று ராகு பெய்ச்சியை முன்னிட்டு, இக்கோவிலில் ராகு, கேதுவுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
கேது பெயர்ச்சி: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா, கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் சவுந்தரநாயகி அம்பாள் சமேத நாகநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. நவகிரக தலங்களில் ஒன்றான இத்தலத்தில், கேது பகவான் தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறார். கேது பகவானும், ஒன்றரை ஆண்டுக்கு ஒரு முறை, ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பின்நோக்கி பெயர்ச்சி அடையக் கூடியவர். நேற்று பிற்பகல் 3:14 மணிக்கு அவர் பெயர்ச்சி அடைந்ததை ஒட்டி, கேது பகவானுக்கு மகா தீபாராதனை செய்யப்பட்டது. சிறப்பு ஹோமங்கள் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள், தரிசனம் செய்தனர்.