நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலயத்தில், ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நடந்த சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
புனித வெள்ளியன்று சிலுவையில் அறையப்பட்டு மரித்த இயேசு கிறிஸ்து, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த நிகழ்வு, ஈஸ்டர் பண்டிகையாக கிறிஸ்துவர்களால் கொண்டாடப்படுகிறது. நேற்று ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, நாகை அடுத்த வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலயத்தில் சிறப்பு வழிபாடு நடந்தது.
நேற்று முன்தினம் இரவு 10:45 மணிக்கு தேவாலய அதிபர் இருதயராஜ் தலைமையில் 20க்கும் மேற்பட்ட பாதிரியார்கள்பங்கேற்ற சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலி, தேவாலய கலையரங்கில் துவங்கியது. உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து, பக்தர்களுக்கு காட்சி தரும் நிகழ்ச்சி, நள்ளிரவு 12:௦௦ மணிக்கு தத்ரூபமாக நடத்திக் காண்பிக்கப்பட்டது.அதிகலை 1:30 மணி வரை நடந்த சிறப்பு திருப்பலியில் திரளான கிறிஸ்துவர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி கலந்து கொண்டனர்.நேற்று மாலை 6:30 மணிக்கு, தேவாலயத்தில் இயேசு கிறிஸ்துவின்திருத்தேர் பவனி நடந்தது.