பதிவு செய்த நாள்
18
ஏப்
2022
09:04
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை ரங்கநாதர் கோவிலில் நடந்த சித்ராபவுர்ணமி தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி தேர் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். கடந்த, 10ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து, அன்ன வாகனம், அனுமந்த வாகனம், கருட வாகனங்களில் பெருமாள், தாயார்களுடன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின், முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் வடம் பிடித்தல் நேற்று முன்தினம் மாலை, 7:00 மணிக்கு நடந்தது. யானை வாகன உற்சவமும், அதை தொடர்ந்து சின்னத்தேர் உற்சவமும் நடந்தது. இரவு, 7:00 மணிக்கு ரங்கநாதர் திருத்தேரில் எழுந்தருளி கோவிலை சுற்றி வலம் வந்தார். நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து, ரங்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அன்னதானம் நடந்தது. தொடர்ந்து, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியும், பல்வேறு ஊர்களைச் சேர்ந்த பெருமாள் பக்தர்களின் நாம சங்கீர்த்தன பஜனைகளும் நடந்தன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ஜெகதீசன் செய்து இருந்தார்.