பதிவு செய்த நாள்
19
ஏப்
2022
04:04
திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடந்தது.
திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான சித்திரை தேர்த்திருவிழா, கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, தினமும் இரவு சிம்மம், பூதம், அன்னம், ரிஷபம், யானை, குதிரை வாகனங்களில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று வெள்ளிக் குதிரை வாகனத்தில், மாரியம்மன் வையாளி கண்டருளினார். இன்று காலை 10.30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட மாரியம்மன், சித்திரை தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து, 11.40 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, தேர் வடம் பிடித்து இழுத்தனர். வரும் 21ம் தேதி, மாரியம்மன் முத்துப் பல்லக்கில் புறப்பாடாகிறார். 22ம் தேதி மாலை, அம்மனுக்கு அபிஷேகமும், இரவு தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. தேரோட்டத்தை முன்னிட்டு, அரசு போக்குவரத்து கழகம் சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது மேலும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், கனரக வாகனங்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.