பதிவு செய்த நாள்
20
ஏப்
2022
10:04
உடுமலை; உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், இன்று சுவாமி திருக்கல்யாண உற்சவமும், நாளை திருத்தேரோட்டமும் நடக்கிறது.உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, இரு ஆண்டு இடைவெளிக்குப்பின், தற்போது நடக்கிறது. கடந்த, 5ம் தேதி, நோன்பு சாட்டுதலுடன் துவங்கி, கம்பம் நடுதல், பூவோடு, மஞ்சள் நீர், வேப்பிலை என தீர்த்தம் ஊற்றுதல் என தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான, அம்மன் திருக்கல்யாணம், இன்று நடக்கிறது. இன்று அதிகாலை, 4:00 மணிக்கு, மாவிளக்கு ஊர்வலமும், மதியம், 3:00 மணிக்கு, அம்மன் திருக்கல்யாணம் நடக்கிறது. நாளை, காலை, 6:45 மணிக்கு, ஸ்ரீ மாரியம்மன், சூலத்தேவருடன் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை, 4:15க்கு, திருத்தேரோட்டம் நடக்கிறது.சுற்றுப்புற கிராமங்களிலிருந்து, பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் சிறப்பான திருவிழா என்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. நுாற்றாண்டு பழமையானதும், முழுவதும் மரத்தினால் ஆன தேர், பல்வேறு சுவாமிகளின் உருவங்கள், புராண, இதிகாச கதைகளை விளக்கும் சிற்பங்கள் என அழகாக காணப்படும் இத்தேரில், சக்கரம் மட்டும் இரும்பில் உள்ளது.நாளை தேரோட்டம் என்பதால், வாழ்வியல் தத்துவம் விளக்கும், 5 நிலைகளை கொண்ட திருத்தேர் தயாராகி வருகிறது. நிலைகள் அமைக்கப்பட்டு, அழகுபடுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.தற்போது, கோவிலுக்கு புதிய தேர் தயார் செய்யும் பணி நடந்து வருவதால், பல நுாற்றாண்டுகள் பழமையான தேரில் அம்மன் திருவீதி உலா வரும் சிறப்பான நிகழ்ச்சியாக, நடப்பாண்டு தேர்த்திருவிழா அமைந்துள்ளது.