கம்பம் கவுமாரியம்மன் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஏப் 2022 10:04
கம்பம்: கம்பம் கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. 21 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவிற்காக சிறப்பான ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலைய துறையும், கிராம கமிட்டியும் செய்து வருகிறது.
தேனி மாவட்டத்தில் வீரபாண்டி கவுமாரியம்மன், கம்பம் கவுமாரியம்மன் கோயில்கள் பிரசித்தி பெற்ற கோயில்களாகும். சுயம்புவான கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா பொதுமக்களால் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும். கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கொண்டாடப்படவில்லை. இந்தாண்டிற்கான திருவிழாவிற்கான சாட்டுதல் நிகழ்ச்சி ஏப். 19 ல் நடைபெற்றது. நேற்று காலை கம்பராயப்பெருமாள் கோயிலிருந்த உற்சவர் மேளதாளத்துடன் அழைத்து வரப்பட்டார். கிராம கமிட்டியினர் உள்ளிட்ட திரளான பக்தர்கள் இதில் பங்கேற்றனர். தொடர்ந்து நேற்று கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. 21 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமூகத்தின் மண்டகப்படி நடத்துவார்கள், மே 4 ல் பொங்கல் வைத்தல், அக்னி சட்டி எடுத்தல், முளைப்பாரி, ஆயிரம் கண் பானை உள்ளிட்ட நேர்த்திகடன்கள் நிறைவேற்றப்படும். தொடர்ந்து மே 5 ல் மஞ்சள் நீராட்டம் நடைபெறும். 21 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத்துறை மற்றும் கிராம கமிட்டியினர் செய்து வருகின்றனர்.