பதிவு செய்த நாள்
28
ஏப்
2022
11:04
திருப்பூர் : கோவில் திருவிழாவின் போது, அதிகப்படியான பக்தர்கள் கூடுவர் என்பதால், மாவட்ட நிர்வாகம், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கிறது. ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகளை அழைத்து, வருவாய்த்துறையினர் தகுந்த ஆலோசனை வழங்குகின்றனர்.பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, கலெக்டர்அல்லது ஆர்.டி.ஓ., வழிகாட்டுதல் வழங்குகின்றனர்.
அதனை பின்பற்றி, வருவாய்த்துறை, போலீசார், ஹிந்து அறநிலையத்துறையினர் பணிகளை செய்கின்றனர். தஞ்சை அருகே நடந்த தேரோட்டத்தின்போது, மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்தனர்.தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், தேர்த்திருவிழா நடக்க உள்ள நிலையில், இதுகுறித்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். மாவட்ட நிர்வாகம் அதற்கு சரியான வழிகாட்டுதல் வழங்க வேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. தேரோட்டம் நடக்கும் ஊர்களில், தேரோட்டம் துவங்கும் முன்னதாக, தேர்வீதிகள் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படுகிறது. மின்வாரியம் அமைத்துள்ள குழு, முழுவீச்சில் மின் பணிகளை மேற்கொள்வது வழக்கம். அதாவது, தேர் வீதிகளில், மின்கம்பம் வரிசையாக இருப்பதால், மின்தடை ஏற்படுத்தி, தேரோட்டம் நடப்பது வழக்கமான ஒன்று.மாலை நேரங்களில் தேர்த்திருவிழா நடத்துவதில் பல்வேறு சிக்கல் இருந்ததால், மாலை 3:00 மணிக்கு தேரோட்டம் நடக்கும் வகையில், மாறுதல் செய்யப்பட்டது. அடுத்த மாதம் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலிலும், ஜூன் மாதம், திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில் தேரோட்டம் நடக்க உள்ளது. அறநிலையத்துறை அதிகாரிகள், தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.ஹிந்து அறநிலையத்துறை உதவி கமிஷனர் செல்வராஜ் கூறுகையில், தேரோட்டம் நடக்கும் வீதிகள், போலீசாரின் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படும். வீதியின் குறுக்கே உள்ள மின் இணைப்புகள் தற்காலிகமாக துண்டிக்கப்படும். ஒவ்வொரு வீதியாக தேர் செல்லும் போது, தேவைக்கு ஏற்ப, வீதி வாரியாக மின்வினியோகம் தடை செய்து வைக்கப்படுவது வழக்கம். அதற்காக, மின்பணியாளர் அடங்கிய ஒரு குழுவை அமைத்துள்ளது.
தேர்த்திருவிழாவின் போது, மின் இணைப்புகள் துண்டிப்பு, தற்காலிக மின்தடை போன்ற தகவல்களை, மின்வாரிய அதிகாரிகள் மூலம் உறுதி செய்த பின்னரே, தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி துவக்கப்படும் என்றார்.தேர்த்திருவிழா போன்ற பல ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் விழாக்களில், எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமல், நிகழ்ச்சியை நடத்த வேண்டியது, ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகத்தின் கடமை என்று கூறுகின்றனர், பக்தர்கள்.