பதிவு செய்த நாள்
29
ஏப்
2022
03:04
இன்று சித்திரை மாதம் ரேவதி நட்சத்திரத்தில் பூவராக ஜெயந்தி விழா நடைபெற்று வருகிறது. வராக மூர்த்தியானவர், பூவராகப் பெருமாளாக தன் பரிவாரங்களுடன் தங்கிய திவ்ய தேசமே ஸ்ரீமுஷ்ணம்.
ஜயன், விஜயன் ஆகிய இருவரும் தங்களது முதல் பிறவியில், கஷ்யபரின் இரு மகன்களாகப் பிறந்தனர். கஷ்யபர் அவர்களுக்கு ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு என பெயரிட்டார். இந்த இரு அசுர சகோதரர்களும் பௌதிக உலகில் பிறந்தபோது, இயற்கையின் சீற்றங்களான பூகம்பம், பலத்த காற்று, அசுப கிரகங்கள் பலம் பெறுதல், சூரிய சந்திர கிரகணங்கள் மாறி மாறி தோன்றுதல் போன்ற அறிகுறிகள் வெளிப்பட்டுக் கொண்டே இருந்தன. ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு ஆகிய இருவரும் கடுந்தவம் மேற்கொண்டு, ஏறக்குறைய சாகா வரத்தைப் போன்ற ஒரு வரத்தை பிம்மாவிடம் பெற்று, கர்வத்தினால் மூவுலகையும் ஆட்டுவித்துக் கொண்டிருந்தனர். ஹிரண்யாக்ஷனின் வருகையைக் கண்ட இந்திரன் உட்பட அனைத்து தேவர்களும் தங்கள் லோகத்தை கைவிட்டு வெவ்வேறு இடங்களுக்கு சென்று ஒளிந்து கொண்டனர். இந்திர லோகமும் காலியாக இருப்பதை கண்ட ஹிரண்யாக்ஷன் தேவர்கள் சண்டை போடாமலேயே தோற்றுவிட்டதை ஒப்புக் கொண்டுவிட்டனர் என எண்ணி பெருமிதம் கொண்டான். சுவர்க்க லோகத்தை விட்டு ஹிரண்யாக்ஷன் சமுத்திரத்தினுள் சென்றபோது, அனைத்து கடல்வாழ் உயிரினங்களும் பயத்தில் நீரை விட்டு வெளியே சென்றன.
பின் வருண தேவரின் தலைநகரான விபாவரிக்கு சென்ற ஹிரண்யாக்ஷன் வருண தேவரைத் தன்னுடன் சண்டையிடும்படி கேட்டுக் கொண்டான். ஹிரண்யாக்ஷனின் கர்வத்தைக் கண்ட வருண தேவர், தனக்கு வயதாகி விட்டதென்றும், விஷ்ணுவே சண்டையிடுவதற்குத் தகுதியான நபர் என்றும் அவனிடம் தெரிவித்தார். பகவான் விஷ்ணுவின் இருப்பிடத்தை நாரதரின் மூலமாக அறிந்து கொண்ட ஹிரண்யாக்ஷன் அவரைத் தேடி புறப்பட்டான். ஹிரண்யாக்ஷன் பூலோகத்தை கர்போதக கடலுக்குள் தன் வலிமையால் மூழ்கடித்தான். இதனைக் கண்ட தேவர்கள் அச்சமடைந்து பிரம்மாவை நாடினர். பிரம்மா பூலோகத்தை எவ்வாறு மீட்க முடியும் என தியானித்த போது அவருடைய வலது நாசியில் இருந்து கட்டை விரல் அளவிலான பன்றி ரூபம் வெளிப்பட்டது. பகவான் விஷ்ணுவே பன்றி ரூபத்தில் அவதரித்திருக்கிறார் என உணர்ந்த தேவர்கள் அச்சத்தைக் கைவிட்டு உறுமிக் கொண்டிருந்த வராஹரைப் பார்த்து துதி பாடினர். இயல்பாக பன்றிகளுக்கு நுகரும் சக்தி அதிகமாக இருப்பதால், கர்போதக கடலுக்குள் இருக்கும் பூமியை மீட்கும் பொருட்டு, வராஹர் நுகர்ந்து கொண்டே நீருக்கடியில் சென்றார். பூலோகத்தையே தன் சிறு கோரைப்பற்களால் தாங்குமளவிற்கு வராஹரின் உடல் பெரிதாக இருந்தது. ஏழு தீவுகள் கொண்ட பூலோகத்திற்கு எவ்வித சிறு பாதிப்பும் ஏற்படாமல் மிகவும் சாதுர்யமாக வராஹர் அதனைத் தன் கோரைப்பற்களால் சுமந்து நீருக்கு வெளியில் எடுத்து வந்து தன் அற்புத சக்தியினால் மிதக்க வைத்தார்.
கடலுக்குள் மூழ்கடித்த பூமியை ஒரு பன்றி சுமந்து கொண்டு நீருக்கு வெளியே வருவதைக் கண்ட ஹிரண்யாக்ஷன் பாம்பைப் போல சீறினான். தன் கையில் இருந்த கதையினால் வராஹரைத் தாக்க ஹிரண்யாக்ஷன் முயன்றான். அப்போது வராஹருக்கும் ஹிரண்யாக்ஷனுக்கும் கடுமையான போர் மூண்டது. சில சமயம் ஹிரண்யாக்ஷனின் கை ஓங்குவதைக் கண்ட தேவர்கள் அச்சத்தில் உறைந்து போயினர். ஒரு கட்டத்தில் வராஹரின் கையில் இருந்த கதையை கீழே தள்ளிய ஹிரண்யாக்ஷன் வராஹரை நிராயுதபாணியாக ஆக்கிவிட்டான். அதனால் கடுங்கோபம் அடைந்த வராஹர் உடனடியாக சுதர்சன சக்கரத்தை வரவழைத்தார். அதைக் கண்ட ஹிரண்யாக்ஷன் உடனடியாக ஆகாயத்திற்கு பறந்த வண்ணம் கதையினால் வராஹரைத் தாக்க முன் வந்தான். கதை, சூலம் ஆகிய ஆயுதங்கள் மட்டுமின்றி அவர்கள் இருவரும் கைகளாலும் சண்டையிட்டனர். யோகேஷ்வர வராஹரிடம் ஹிரண்யாக்ஷன் பல மாயாஜால வித்தைகளை அரங்கேற்றினான். சுதர்சன சக்கரத்தை ஏவிய வராஹ பகவான் அனைத்து மாயாஜாலங்களையும் நொடிப் பொழுதில் அழித்தார். தன் மாயாஜால வேலைகள் பலிக்கவில்லை என்பதை உணர்ந்த ஹிரண்யாக்ஷன் தனது பலமான இரு கைகளால் பகவானைத் தழுவி நசுக்க முன் வந்தான். வராஹ பகவான் அவனது காதில் பலமாக அறைவிட்டபோது, ஹிரண்யாக்ஷன் விழி பிதுங்கி, கை உடைந்து, வேரோடு பெயர்த்தெடுத்த மரத்தை போன்று கீழே விழுந்தான்.
ஹிரண்யாக்ஷனின் உயிர் பிரியாத நிலையில் பகவான் வராஹரின் திருப்பாதம் அவனது நெஞ்சில் வைக்கப்பட்டிருந்ததைக் கண்ட பிரம்மா, யாருக்கு இம்மாதிரியான அதிர்ஷ்டமான மரணம் கிட்டும் என எண்ணி வியந்தார். யோகிகளும் ஞானிகளும் பகவானின் திருப்பாதங்களைத் தியானித்து ஆயிரக்கணக்கான வருடங்கள் தவம் மேற்கொள்கின்றனர். ஆனால் இந்த அசுரனுக்கோ பகவான் வராஹரின் திருப்பாதங்கள் உடலில் தொட்ட வண்ணம் உடலை நீக்கும் பாக்கியம் கிட்டியது. பூமாதேவி, வராக திருக்கோலத்திலேயே தன்னுடன் சில காலம் தங்கியிருந்து அருள் பாலிக்கும்படி வேண்டியதன் பேரில், பூவராகப் பெருமாளாக அங்கேயே அருள்பாலிக்கத் தொடங்கினார். அப்பொழுது, அவருடைய பரிவாரங்களும் பூமியிலேயே தங்கின. திருமால் தன் கைகளில் இருக்கும் சங்குக்கு சங்கு தீர்த்தத்திலும், சக்கரத்திற்கு சக்கர தீர்த்தத்திலும், பிரம்மாவுக்கு பிரம்ம தீர்த்தத்திலும், கருடனுக்கு பார்க்கவ தீர்த்தத்திலும், வாயுவுக்கு கோபுரத்திலும், ஆதிசேஷனுக்கு பலிபீடத்திலும், விஷ்வக்சேனருக்கு வாசலிலும் இடமளித்து அருளினார். அதோடு இங்கு வந்து தன்னை வழிபடுபவர்களை எமதூதர்கள் நெருங்காமல் பார்த்துக் கொள்ளும் பணியை ஆதிசேஷனுக்கும், வைகுண்டத்திற்கு அழைத்துச் செல்லும் பணியை பிரம்மாவுக்கும் வழங்கினார்.
இப்படி வராக மூர்த்தியானவர், பூவராகப் பெருமாளாக தன் பரிவாரங்களுடன் தங்கிய திவ்ய தேசமே ஸ்ரீமுஷ்ணம்.
இங்குள்ள மூலவரின் திருமேனி, முழுவதும் சாளக் கிராமத்தினால் ஆனது. எனவே தினமும் திருமஞ்சனம் செய்யப்படுகிறது. பிரம்மன் யாகத்தில் இருந்து தோன்றியதால் ‘யக்ஞவராகர்’ என்ற பெயருடன் உற்சவர் திகழ்கிறார். இவருடன் திருமகள், நிலமகள் ஆகியோர் உடனிருந்து பேரருள் புரிகின்றனர். பூமியை தனது கோரைப்பற்களினால் சுமந்து வந்து ஆதிசேஷன் மேல் முன்னிருந்த நிலையில் நிலைக்கச் செய்து, தனது இரண்டு கண்களினின்றும் அசுவத்த விருட்சத்தையும் துளசியையும் உண்டாக்கி, தனது வியர்வை நீரின் பெருக்கை கொண்டு நித்யபுஷ்கரணி என்ற புனித தீர்த்தத்தையும் ஏற்படுத்தி, ஸ்ரீ முஷ்ணம் என்னும் இத்தலத்தை இருப்பிடமாக ஏற்றார். பிரம்மன் முதலானோர் பூஜிக்க ஸ்ரீ பூவராகன் என்ற திருநாமத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். திருக்கோயிலின் கருவறையில் வீற்றிருக்கும் மூலவரைத் தரிசிக்கும் முன்பாக, தனி சந்நிதியில் அமைந்தருளும் ஸ்ரீநிவாசப் பெருமாளை தரிசனம் செய்ய வேண்டும். கோயிலின் தென் கிழக்குத் திசையில் நித்ய புஷ்கரணி அமைந்துள்ளது. இதில் ஸ்நானம் செய்து அருகிலேயே சந்நிதி கொண்டுள்ள ஸ்ரீ லட்சுமி நாராயணரின் தரிசனம் பெறுவது சிறப்பு. கருவறையின் முன்பாக ஜெய, விஜயர்கள், துவாரபாலகர்களாக வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். கருவறையின் உள்ளே பூவராக மூர்த்தி வீற்றிருந்து சேவை சாதிக்கிறார். இவர் வீற்றிருக்கும் விமானம், பாவன விமானம் என்று அழைக்கப்படுகிறது.
பிள்ளைப்பேறு வேண்டுவோர் நித்ய புஷ்கரணியில் நீராடி, அரசமரத்தைச் சுற்றிவந்து, பூவராகரை உள்ளன்புடன் உருகி வழிபட வேண்டும். பின்னர் ஆலயத்தில் சந்தான கிருஷ்ண மூர்த்தத்தை, கைகளில் வாங்கி மடியில் வைத்து வணங்கினால், மழலை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். தெற்குப் பக்கத்தில் தனிச் சன்னிதியில் அம்புஜவல்லித் தாயார், கிழக்கு திசை நோக்கி அமர்ந்து அருள்பாலிக் கிறார். அருகே உள்ள வளையமாதேவி என்ற ஊரில் கார்த்திகாயினி முனிவரின் மகளாக அவதரித்து இத்தலப் பெருமாளைத் திருமணம் செய்து கொண்டவர்தான் அம்புஜவல்லித் தாயார். இத்தலத்து சுவாமியையும், தாயாரையும் வணங்கினால், திருமண வரம், குழந்தைப்பேறு கிடைக்கும். பகை அச்சம் விலகும். காரியத்தடைகள் நீங்கும் என்பது கண்கூடு. இந்த ஆலயத்தின் மகிமை பற்றி கந்தபுராணம், பிரமாண்ட புராணம், விஷ்ணு புராணம், ஸ்ரீமத் பாகவதம் ஆகிய நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இங்கு வந்து பூவராக சுவாமியை தரிசித்து பிரார்த்தனை செய்தால் அவர்களது விருப்பங்கள் நிறைவேறும். ஆனந்தமான வாழ்வும் கிட்டும்.