பதிவு செய்த நாள்
04
மே
2022
09:05
கடவுளிடத்தில் எனக்குப் பூரண விசுவாசம் உண்டு என்கிறோம். சமீப காலங்களில் விசுவாசம் என்ற சமஸ்கிருத வார்த்தையை கிறிஸ்தவர்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள். அவர்களது விசுவாசம் இறைநம்பிக்கையைக் குறிக்கிறது. ஆனால் ஹிந்து மதத்தில் விசுவாசம் என்பது பரந்துபட்ட பொருளைக் கொண்டது. கடவுளிடம் நம்பிக்கை வைப்பது ஒன்று; கடவுளின் விசுவாசியாகப் பரிணமிப்பது என்பது முற்றிலும் வேறு. கடவுளிடத்தில் நம்பிக்கை என்பது ஆரம்ப நிலை. நான், எனது நம்பிக்கை, எனது தெய்வம் ஆகிய மூன்றும் வேறானவை என்ற நிலை அது. விசுவாசம் என்பதோ இந்த மூன்றிற்கும் உள்ள தொடர்பையும் பரிமாணத்தையும் உணர்த்துவது.
விசுவாசம் என்ற பதம் விச்வம் என்ற பதத்திலிருந்து வந்தது. விச்வம் என்ற நாமத்திற்கு ஆதிசங்கரர் ஆழமான பொருள்களைக் கூறுகிறார். விஷ்ணு சகஸ்ரநாமம் கூறும் பரம்பொருளான பிரம்மத்தைப் பற்றிய முதல் திவ்ய திருநாமமே விச்வம் ஆகும். விச்வம் என்பது ‘எல்லாமாகிய நிலை’ என்ற பொருளையும், ‘உலகம் - ஜகத்’ என்ற பொருளையும் குறிக்கிறது. இறைவனே, பிரபஞ்சத்தில் உள்ள எல்லாமாக, ஜடப்பொருள் மற்றும் உணர்வுப் பொருள்களாகவும் ஆகியிருக்கிறார்; அவர் எங்கும் நிறைந்திருக்கிறார். இதனை தைத்திரீய உபநிஷதம், ‘பிரம்மம், தான் படைத்த பொருள்கள் அனைத்திலும் தானே உட்புகுந்தது - ‘தத் ஸ்ருஷ்ட்வா ததேவ அனுப்ராவிஷத்’ என்கிறது. உலகைப் படைத்த பிறகு தான் படைத்த ஒவ்வொன்றிலும் பரம்பொருள் நுழைந்து (விசதி) நிறைந்து இருக்கிறது. ‘விசதி இதி விச்வம் பிரம்ம’ -என்று ஆதிசங்கரர் உரை எழுதினார். அதேபோல் பிரளய காலத்தில் எல்லாம் ஒரு முடிவிற்கு, அழிவிற்கு வரும்போது அனைத்து உலகங்களும் பிரம்மத்தில் லயிக்கின்றன. ‘சம்ஹ்ருதௌ பூதானி விசந்தி யஸ்மின்’என்று ஆதிசங்கரர் விளக்குகிறார். விச்வரூபியாக இருக்கிற பிரம்மம் அல்லது இறைவன் அனைத்தையும் காண்கிறார்; கண்காணிக்கிறார். கடந்தும் நிற்கிறார். ஓர் உதாரணம். தங்கம் மோதிரமாகச் செய்யப்படும்போது மோதிரம் முழுவதிலும் தங்கம் வியாபிக்கிறது. தங்கமானது மூலப்பொருள், அது காரண நிலை. மோதிரம் தங்கத்தின் காரிய நிலை. அதுபோல் காரியமான உலகில் காரணமான பிரம்மம் ஒவ்வோர் அணுவிலும் பிரவேசித்துள்ளது. மோதிரத்தில் தங்கத்தைத் தவிர வேறு இல்லை. உலகில் உள்ள எல்லாவற்றிலும் பிரம்மத்தைத் தவிர வேறு இல்லை.
அடுத்து, மோதிரம் உருக்கப்பட்டால் மீண்டும் அது தங்கமாகவே மாறும். காரிய நிலையிலிருந்து காரணமான மூலப் பொருளுக்கு மீண்டும் திரும்பும். இது யுகம் யுகமாக சனாதன மதம் சொல்லி வரும் சத்தியம். இன்றைய நவீன விஞ்ஞானம் இதை மெல்லப் புரிந்து கொண்டு வருகிறது. பரம்பொருளிடமிருந்து உதித்து மீண்டும் பரம்பொருளிடமே லயிக்கும் அந்த பிரம்மாண்டமான காரியம் பிர + லயம் என்று விசேஷப் பெயர் பெறுகிறது. பதஞ்சலி யோக சூத்திரம் பிரளயத்தை ப்ரதி பிரசவம் என்கிறது. முதல் பிரசவம் படைப்பு என்றால், பிரளயமோ ப்ரதி பிரசவம், அடுத்த பிரசவம் எனப்படுகிறது. பிரம்மத்திலிருந்து தோன்றியதால் படைப்பும் பிரசவம் எனப்படுகிறது. பிரம்மத்திலேயே முடிவில் உலகம் லயிப்பதால் பிரளயமும் பிரசவம் என்றே பெயர் பெறுகிறது. சனாதன தர்மமான இந்து மதம் பிரம்மத்தையே லோகமாதாவாக ஆராதிக்கும் அற்புத மதம். சிருஷ்டியும் பிரளயமும் லோகமாதாவிடமிருந்து தோன்றி அவளிடமே திரும்ப அடைவதை ஸ்ரீராமகிருஷ்ணர் தமக்கே உரிய கிராமிய மொழியில் கூறுகிறார்: ‘‘நான் இப்போது ஜகதம்பிகையின் திவ்விய காட்சியைக் கண்டேன். முதலில் தேவி கர்ப்பவதியாகத் தோன்றினாள். குழந்தை ஒன்றினைப் பெற்றெடுத்தாள். பிறகு அவளே அதனை விழுங்கிவிட்டாள். அவளது வாயினுள் போனதும் அந்தக் குழந்தை ஒன்றும் இல்லாமல் போயிற்று. எல்லாம் சூனியமே என்று அவள் எனக்குக் காண்பித்தாள்.’’ இறைவன் மனிதனுக்குத் தொடர்ச்சியாகச் சொல்லி வரும் ஒரு செய்தி இதுதான்: ‘பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்தும், அனைவரும் எனக்குள்ளேதான்; அனைத்துக்குள்ளும், அனைவருக்குள்ளும் வீற்றிருப்பது நானே.’ இதனை பகவத்கீதை (6-30) உறுதி செய்கிறது. ‘யார் என்னை எல்லாவற்றிலும், எல்லாவற்றையும் என்னிலும் காண்கிறானோ, அவனுக்கு நான் மறைவதில்லை; அவனும் எனக்கு மறைவதில்லை.’ பிரமாண்டமான இந்த உண்மையைப் போர்க்களத்தில் விஸ்வரூபமெடுத்து அர்ஜுனனுக்குக் காட்டினார் பகவான் ஸ்ரீகிருஷ்ணர். அதன் மூலம் தோற்றமும் பிரளயமும் தன்னிடம்தான் என்பதை நிச்சயப்படுத்தினார்.
விஸ்வரூப தரிசனம் பிரமாண்டத்தில் மட்டுமல்ல, பக்தர்களின் மனதிலும் அதை உதிக்கச் செய்கிறார் பகவான். தாய் யசோதை பாலகிருஷ்ணனை நீராட்டியபோது அவனது நாக்கை மஞ்சளால் வழித்தாள். அப்போது அவனது திருவாயில் பிரபஞ்சம் முழுவதையும் கண்டு வியப்புற்றாள். .... ஐயநா வழித்தாளுக்கு அங்காந்திட வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே’ என்று பெரியாழ்வார் இந்நிகழ்வைப் பிரபந்தித்தார்.
பிரபத்தி கூறும் மகா விசுவாசம்: நான் இறைவனின் விசுவாசி என்று உணரும்போது இறையருளில் நான் இருக்கிறேன், இறைவனின் சாந்நித்தியத்தில் அடியேன் திளைக்கிறேன், இறைவனுடைய பாதுகாப்பில் நான் வாழ்கிறேன் என்று பல அர்த்தங்கள் அனுபவ ரீதியில் விரிகின்றன. இறைவன் என் தந்தை, தாய் அல்லது இறைவனின் தாசன் நான் போன்ற உறவு முறைகளில் பக்தன் இறைவனிடம் நெருங்குகிறான். இந்த நிலை வைணவத்தில் பிரபத்தி நெறியில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இறைவன் தன்னைக் கைவிட மாட்டான்; நிச்சயம் காப்பாற்றுவான் என்ற பூரண சரணாகதி நிலை இது. பிரபத்தி நெறியில் இது மகா விசுவாசம் என்று அழைக்கப்படுகிறது. கடவுளுக்குள் நான் இருக்கிறேன்; எனக்குள் கடவுள் மட்டுமே நிறைந்திருக்கிறார் என்ற நிலையில் ஒருவர் உயரும்போதுதான் அவர் கடவுளின் உண்மையான விசுவாசி ஆகிறார். அது வெறும் மனதின் நம்பிக்கை அல்ல; ஜீவாத்மாவின் இயல்பான தெய்விகப் பயணம் அது பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிறந்த பக்தையான கோபாலேர்மா ஹரியின் நாமத்தையே மூச்சாகக் கொண்டவர். உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணனே என்று நம்மாழ்வார் கூறிய அனுபவத்தை உணர்ந்தவர். அவரது வயதான காலத்தில் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் அவரைக் காணச் சென்றிருந்தார். கோபாலேர்மா பாயில் படுத்திருந்தார். அப்போது ஸ்ரீராமகிருஷ்ணர், இவரது உடலில் ஹரியின் திருநாமம் மட்டுமே நிறைந்திருக்கிறது என்று கூறினார். கோபாலேர்மா ஸ்ரீஹரியின் தீவிர விசுவாசி என்பதை ஸ்ரீராமகிருஷ்ணர் பதிவு செய்தார்.
நீக்கமற நிறைந்திருக்கும் விச்வத்தில், அந்த நிறை சாந்நித்தியத்தில் வாசம் செய்பவனே விசுவாசி ஆவான். தெய்விக அனுபவங்களைச் சிந்தித்தும், உயிர் தரிப்பதற்கு அதையே சுவாசமாகவும் கொண்டவன் தெய்வ விசுவாசி. எல்லாமாய் இருப்பவர் இறைவனே. இறைவனின் விசுவாசி இந்தப் பேருண்மையை உணர்வதால் எங்கும் இறைவனையே கண்டு தன்னைப் போலவே பிற உயிர்களையும் பார்க்கும் பக்குவப் பரிவு அவனுக்கு வந்துவிடும். எல்லாவற்றையும் இறைவனே செய்கிறான் என்று உணர்ந்தவனுக்கு யமபயம் இல்லை. செய்வதும் கொடுப்பதும் வாங்குவதும் போன்ற எல்லாம் இறைவனுடன் நெருக்கமான சிரத்தையுடன் செய்யப்படும். அப்போது எல்லாம் ஈச்வர அர்ப்பணமாகி ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத் - எல்லாம் விஷ்ணு மயம் என்ற பாவனை வலுத்து தன்னிடமே பகவான் வசிப்பதை அந்தப் பக்தன் உணர்வான். யாரும் பார்க்காமல் தனியாகத் தன்னால் உண்ண முடியவில்லை என்று தனது குருவிடம் சீடர் கனகதாசர் கூறினார். காரணம், எப்போதும் பகவான் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறார், அவர் காணாத இடம் எதுவும் இல்லை என்றார் அவர். இவ்வாறு பரம்பொருளின் பார்வையில், பாதுகாப்பில் இருந்தவர் விசுவாசி கனகதாசர். சிவபெருமானின் திருநாமங்களில் ஒன்று விசுவநாதர். விசுவநாதரின் தெய்விகப் பிள்ளைகளாக, அன்பால் அடிமைகளாக விளங்குவதுதான் விசுவாசி என்பதன் விரிவான பொருள். - சுவாமி விமூர்த்தானந்தர்