1,005வது அவதார நட்சத்திரம் ராமானுஜருக்கு சிறப்பு யாகம்
பதிவு செய்த நாள்
06
மே 2022 08:05
சேலம்: ஸ்ரீமத் ராமானுஜரின், 1,005வது அவதார திருநட்சத்திரத்தையொட்டி, எருமாபாளையத்தில் உள்ள மணிமண்டபத்தில் சிறப்பு யாகம் நடந்தது. சேலம், எருமாபாளையம், ஏரிக்கரையில் ஸ்ரீமத் ராமானுஜருக்கு, சுதை சிற்பத்துடன் நான்கு திசைகளில், நான்கு திவ்ய தேச பெருமாள் கோவில்களுடன் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. அங்கு மாதந்தோறும், ராமானுஜரின் அவதார நட்சத்திரமான திருவாதிரையில், சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. அதன்படி, சித்திரை மாத திருவாதிரை, 1,005வது அவதார திருநட்சத்திரம். அதையொட்டி நேற்று காலை, சுப்ரபாதம், கோ பூஜை, விஸ்வரூப சேவையுடன் நட்சத்திர பூஜை தொடங்கியது. தொடர்ந்து, 108 கலசங்களில் புனிதநீர் நிரப்பி, உலக நன்மை வேண்டி சிறப்பு யாகத்தை, பட்டாச்சாரியார்கள் நடத்தினர். மதியம், பூர்ணாஹூதியுடன் யாகம் நிறைவடைந்தது.
உற்சவர் பெருமாள், ‘சாலக்கிராம’ ராமர், ராமானுஜர் ஆகியோருக்கு, பால், தயிர், இளநீர், கரும்புச்சாறு, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட மங்கல பொருட்கள், யாகத்தில் வைத்து பூஜித்த கலசங்களில் இருந்த புனிதநீரால் சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. திரளான பக்தர்கள், ஸ்ரீமத் ராமானுஜர், ‘நுாற்றாந்தாதி’ பாராயணம் செய்தபடி தரிசித்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை முதல் இரவு வரை, பல்வேறு பாகவதர் குழுக்கள் சார்பில், தொடர் நாம சங்கீர்த்தனை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை மணிமண்டப நிர்வாகிகள், பக்தர்கள் செய்திருந்தனர்.
|