பதிவு செய்த நாள்
07
மே
2022
09:05
ஸ்ரீபெரும்புதுார், : ஸ்ரீ ராமானுஜர் 1,005ம் ஆண்டு அவதார உற்சவ விழா நேற்று, கந்தப் பொடி வசந்ததுடன் நிறைவு பெற்றது. பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் கந்தப் பொடி துாவி மகிழ்ந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுாரில் ஸ்ரீ ராமானுஜர், 1,005ம் ஆண்டு அவதார விழா, ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் ஏப்.,26ம் தேதி துவங்கியது. விழாவை முன்னிட்டு தினமும், பல்வேறு வாகனங்களில், ஸ்ரீ ராமானுஜர் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.விழாவின் 10ம் நாளான நேற்று முன்தினம், சாற்றுமுறை விழா நடந்தது. இரவு முழுதும் பஜனை பாடல்கள் பாடியவாறு நான்கு மாட வீதிகளில், பக்தர்கள் வலம் வந்து நேற்று காலை கோவிலை சென்றடைந்தனர்.திருப்பதி, ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்துார் உள்ளிட்ட திவ்ய தேசங்களில் இருந்து மாலை, பட்டு வஸ்திரங்கள், பரிவட்டம் கொண்டுவரப்பட்டு, ஸ்ரீ ராமானுஜருக்கு சாற்றப்பட்டன.இதைத் தொடர்ந்து, கந்தப் பொடி வசந்தம் நடந்தது. கந்தப் பொடி என்றழைக்கப்படும் நறுமணப் பொடியை, ஸ்ரீராமானுஜர் மீது துாவிய பக்தர்கள், ஒருவருக்கொருவர் தங்கள் மீது துாவி மகிழ்ந்தனர். இதைத் தொடர்ந்து, ஸ்ரீ ராமானுஜர் 1,005ம் ஆண்டு அவதார உற்சவ விழா நிறைவு பெற்றது.